அரசாங்கத்திலிருந்து விலகுகிறதா சுதந்திரக் கட்சி?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருபகுதியினர் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டுமென அக்கட்சியின் சிரேஷ்ட உபதவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஷ தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் மத்தியச் செயற்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான சுதந்திரக் கட்சி தொடர்ந்து ஆளுந்தரப்பால் புறக்கணிக்கப்படுகிறது.

அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையாக வெளியேற வேண்டும்.

இல்லை என்றால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை தொடர்ந்து அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குமாறு கூறிவிட்டு, கட்சியின் ஏனையவர்கள் அரசாங்கத்திலிருந்து விலகி கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும்.

அரசாங்கத்தின் பங்காளியாக இருந்தாலும், அரசாங்கத்தில் நம்மை இணைத்துக் கொள்ளவில்லை.

அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம்.

ஆனால் இறுதியில் எமக்கு என்ன கிடைத்தது?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆயிரத்துக்கும் அதிகமான பிரதேசசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்குக் கூட நிதி ஒதுக்கீடு செய்வதில்லை.

ஆளுங்கட்சியினருக்கு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு, 20 இலட்ச ரூபாய் நிதியை அரசாங்கம் ஒதுக்குகின்ற போதிலும், சு.கவினருக்கு அந்த நிதி கிடைப்பதில்லை.

இந்த விடயங்களை சு.கவின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர வெளிப்படையாகக் கூறினார்.

அதன் பின்னர் அவரை ஆளுங்கட்சியினர் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

எமது கட்சியில் உள்ள எவரும் தயாசிறிக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.

எனவே அரசாங்கத்தில் நீங்கள் இருங்கள்.

நாங்கள் அரசாங்கத்திலிருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக பணியாற்றுகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply