ராஜபக்ஷ வைரஸை முதலில் தோற்கடிக்க வேண்டும்..!

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடிகள் குறித்த விசாரணைகளின் போது அஜித் நிவார்ட் கப்ரால் தொடர்பான பல்வேறு தகவல்களும் வெளியாகியிருக்கின்ற சூழ்நிலையில், அரசாங்கம் அவரையே மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்திருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அஜித் நிவார்ட் கப்ரால் தனது மோசடி தொடர்பான இரகசியங்கள் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே நிதிச்சபையின் செயலாளராக இருந்த தவுலகலவை அந்தப் பதவியிலிருந்து நீக்கியிருக்கின்றார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இத்தகைய செயற்பாடுகளின் ஊடாக கொரோனா வைரஸை விடவும் மிகப்பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ‘பொருளாதார வைரஸாக’ ஆளுந்தரப்பு எழுச்சியடைந்து வருகின்றது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்றுத் திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பிணைமுறி விவகாரம் மாத்திரமன்றி ஹெய்ஜிங் ஒப்பந்தம், க்ரீக் ஒப்பந்தம் என்பன தொடர்பிலும் தற்போதைய ஆளுநர் ஏற்கனவே குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருந்தார்.

இவையனைத்தையும் விட ‘நாணயத்தாள்களை அச்சிடுவதால் பணவீக்கம் ஏற்படாது’ என்ற கருத்தை முன்வைத்த நபரே இப்போது மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை வகிக்கின்றார்.

தற்போது கொரோனா வைரஸை விடவும் மிகவும் பாரதூரமான வைரஸாக இருக்கக்கூடிய ‘ராஜபக்ஷ வைரஸிற்கு’ பயந்து பலரும் நாட்டைவிட்டுச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

ஆனால் ‘ராஜபக்ஷ வைரஸை’ முழுமையாகத் தோற்கடித்து நாட்டை மீட்டெடுப்பதற்கு நாமனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று நாட்டுமக்களிடம் வலியுறுத்துகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *