இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக அறிவிக்க தயார் – ருவிட்டர் செய்தி குறித்து இந்திய தூதரகம் விளக்கம்

இலங்கை மக்கள் விரும்பினால், இலங்கை தனது ஒரு மாநிலம் என அறிவிக்க இந்தியா தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார் என வெளியாகியுள்ள ருவிட்டர் செய்தி உண்மைக்கு புறம்பானது என இந்தியா தெரிவித்துள்ளதுடன், அதனை கடுமையாக சாடியுள்ளது.

இலங்கை மக்கள் இணங்கினால் இலங்கையை இந்தியா தனது இன்னுமொரு மாநிலமாக அறிவிக்க தயார்- அதற்கு பதிலாக இந்தியா இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு உட்பட ஏனைய பிரச்சினைகளிற்கு தீர்வை காணும் நீண்டகால விடயங்களிற்கும் உதவலாம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார் என குறிப்பிடும் ருவிட்டர் செய்தியொன்று வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில், குறித்த ருவிட்டர் செய்தி போலியானது என தனது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பக்கத்தில் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரின் ருவிட்டர் கணக்கிற்குரியதென காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட போலியான படம் தொடர்பாக தாம் அறிந்துள்ளதாகவும் இது முழுக்கமுழுக்க போலியானதும் புனையப்பட்டதுமாகும் என்றும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீய எண்ணத்துடனான இதன் உள்ளீடுகளை தாம் கடுமையாக மறுக்கின்றோம் என்றும் இந்தியா – இலங்கை இடையில் காணப்படும் நட்புரீதியானதும் நெருக்கமானதும் தொன்மையானதுமான உறவை பாதிக்கும் வகையில் அவநம்பிக்கைக்கொண்ட தரப்பினரால் மேற்கொள்ளப்படும் தீய நோக்கத்துடனான இம்முயற்சிகள் ஒருபோதும் வெற்றியடையப்போவதில்லை எனவும் குறித்த பதிவில் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *