மருத்துவக் கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்பும் இலங்கை மாணவர்கள், வெளிநாட்டு மருத்துவக் கல்லூரியைத் தெரிவுசெய்யும்போது பல காரணிகளைக் கருத்திற்கொள்ள வேண்டும் என்று இலங்கை மருத்துவ சபையின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாணவரொருவர், தனது மருத்துவக் கல்வியை முடித்துவிட்டு இலங்கைக்கு வந்து மருத்துவ சேவையில் ஈடுபட விரும்பினால் இலங்கை மருத்துவ சபையினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியை மட்டுமே தெரிவு செய்ய வேண்டும்.
இலங்கை மருத்துவ சபையால் அங்கீகரிக்கப்படாத மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம்பெற்ற மருத்துவ பட்டதாரி இலங்கையில் மருத்துவ சேவையில் ஈடுபட முடியாது.
அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல், இலங்கை மருத்துவ சபையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்.
சில வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் தடயவியல் கற்பித்தல் மிகக் குறைவு, ஏனெனில் அந்த நாட்டில் ஒரு மருத்துவர், தடயவியல் மருத்துவத் துறையை அறிந்து கொள்வது அவசியமில்லை.
ஆனால் இலங்கையில் பணிபுரியும் மருத்துவர் தடயவியல் மருத்துவம் படித்திருப்பது அவசியம்.
வெளிநாட்டு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்ற பிறகு, இலங்கை மருத்துவ சபை நடத்தும் தகுதித் தேர்வில் (ஈ.ஆர்.பி.எம்) சித்தி பெறுவது கட்டாயமானதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.