டோனி அதிரடி: 7 வது ஆட்டத்திலும் படுதோல்வியடைந்த மும்பை

மும்பை, ஏப் 21

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 33-வது ஆட்டம் வியாழக்கிழமை மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா 51 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். சூர்யகுமார் யாதவ் 32 ரன், ஹிருத்திக் ஷாகீன் 25 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

சென்னை அணி சார்பில் முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. முதல் பந்தில் ருத்ராஜ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய சாண்ட்னர் 11 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய உத்தப்பா 30 ரன்னிலும், ஷிவம் டுபே 13 ரன்னிலும் வெளியேறினர். பொறுப்புடன் ஆடிய அம்பதி ராயுடு 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கடைசி 5 ஓவரில் 53 ரன்கள் தேவைப்பட்டது. ஜடேஜா 3 ரன்னில் அவுட்டானார். டோனியுடன், பிரெடோரியஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் கடைசி வரை போராடினர். பிரெடோரியஸ் 22 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், சென்னை அணி 156 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

டோனி 13 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *