(க.விஜயரெத்தினம்)
நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற  அனைத்து அதிபர்களும் மற்றும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் திங்கட்கிழமை(25)வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொன்னுத்துரை உதயரூபன் இன்றையதினம்(22) ஊடகங்களுக்கு  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற  அனைத்து அதிபர்களும் மற்றும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும்,அன்றைய நாளில் பாடசாலைக்கு சமூகமளிக்காமலும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் தற்போதைய அரசாங்கத்தினால் தோற்றுவிக்கப்பட்டதாகும்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பொறுப்புவாய்ந்த  அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.இந்தப் போராட்டத்திற்கு அதிபர்கள்,ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு முழுமையான ஆதரவினை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய சூழ்நிலையில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டிருப்பதுடன் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக மாணவர்கள் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்லுவதற்கு மிகவும் கஷ்டப்படும் துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது.

இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக மாணவர்களை அவர்களின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாடசாலைக்கு இணைத்துக் கொள்வதோடு, ஆசிரியர்களையும் அவர்களின் வீட்டிற்கு அருகாமையில் அமைந்துள்ள பாடசாலைக்கு தற்காலிக இணைப்பு வழங்குமாறும் அல்லது வேறு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் 2022.04.20 திகதி கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்களுக்கு பாடசாலைக்கு வருகை தருவதற்கான போக்குவரத்து பிரச்சினைக்கு சரியான தீர்மானத்தை மேற்கொண்டு தீர்வினை வழங்க கோரியும்,காலி முகத்திடலில் நடைபெறும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் அனைத்து பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்களும் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலமான கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும்,அன்றையதினம் அதிபர்கள்,ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு அல்லது பொறுப்பான அதிகாரிகளுக்கும் சுகயீனலீவு விடுமுறை அறிவிக்க வேண்டிய அவசிமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *