புதிய அரசமைப்பை கொண்டு வருவதற்கு நாம் ஏன் இன்னும் பின் நிற்கின்றோம்? அதாஉல்லாஹ் கேள்வி

JR ஜெயவர்தனவின் 1978 ம் ஆண்டய யாப்பில் மீண்டும் மீண்டும் திருத்தங்களை மாத்திரம் செய்து பழகிப்போன நமக்கு, மூவின மக்களையும் நிம்மதியாக வாழவைக்க கூடிய ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கு நாம் ஏன் இன்னும் பின்நிற்கின்றோம்? என தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் பாராளுமன்றில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் நாளைய தலைவர்கள் இன்று வீதியிலே நின்று தமதும் நாட்டினதும் எதிர்காலம் தொடர்பில் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். இது வரலாற்றில் முக்கியமானது. ஏனெனில் இனவாதமற்ற போராட்டமாகவும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும் முன்னெடுக்கின்ற போராட்டம் இதுவாகும். இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு பாராளுமன்றம் விடை சொல்லியாக வேண்டும்.

பாராளுமன்றுள் இருக்கும் இனவாதம் களையப்படவேண்டும். ஒவ்வொருத்தரும் தமது அதிகார இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக சூழ்ச்சிகள் பல செய்திருக்கிறார்கள். அப்படியான ஒரு சூழ்ச்சியானது உள் நாடு, வெளி நாட்டு சக்திகளின் மூலம் நிறைவேற்றப்பட்டே, ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றதாக பாராளுமன்றில் உள்ள பலரும் பேசுகின்றார்கள். எனவே இதன் உண்மை வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பில் அரசாங்கத்திற்குள் இருந்து பல தடவைகள் போராடினோம். பேசினோம். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று நடந்து கொண்டார்கள். காலம் கடத்தியே நல்லடக்கம் செய்யும் அனுமதி தந்தார்கள்.இவை அனைத்தும் இன்று நாட்டிற்கும், தலைவருக்கும் சாபமாக மாறியுள்ளது.

பொருளாதார ரீதியாக நாடு இன்று வீழ்ந்துள்ளது. நமது நாட்டின் வளங்களை பயன்படுத்தி உச்ச பயனை அடைந்து கொள்ளாமல், கொமிசன்களை பெறுவதற்காக செயற்பட்டதனால் உள்ளூர் பொருளாதாரம் வீழ்த்தப்பட்டுவிட்டது.

ஒவ்வொரு இளைஞனும் தொழில் அதிபர்களாக வருவதற்குரிய வளம் நமது நாட்டில் உள்ளது. எனவே, ஸ்திரமான பொருளாதார கொள்கை நாட்டிற்கு அவசியம்.

தீர்வு பாராளுமன்றிடமே உள்ளது. புதிய ஒரு யாப்பினை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். – எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *