மலையக அரசியல்வாதிகள் பிழை விட்டுவிட்டு வீதியில் நின்று ஆர்ப்பாட்டம் செய்து பிரயோசனமில்லை !

அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டிருக்கும் மலையக அரசியல்வாதிகளே பொறுப்புக்கூற வேண்டியவர்கள். அந்த யுவதி உட்பட ஏனைய மலையக இளம் தலைமுறைகளுக்கு சரியான வழிகாட்டல்களையும், வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுக்காது தவறு ஏற்பட்ட பின்னர் நீலிக்கண்ணீர் வடித்து எவ்வித பயனுமில்லை என்பதை அவர்கள் இனியாவது மனதில் கொள்ள வேண்டும் என மீஸான் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக இலங்கையில் பேசுபொருளாக மாறியிருக்கும் மலையக சிறுமி விவகாரம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது,

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அண்மையில் முன்னாள் அமைச்சர் றிசா பதியுதீனின் வீட்டில் வைத்து தீயில் கருகி காலமான மலையக சகோதரியின் மரணத்திற்கு கோஷமிட்டுக்கொண்டு இருப்பது அரசியல் இலாபம் தேடும் முயற்சியே.

மலையகத்திலிருந்து நிறைய சகோதர சகோதரிகள் இவ்வாறு நாடுமுழுவதிலும் பணிக்காக குறைந்த சம்பளத்திற்கு செல்கிறார்கள். இது காலாகாலமாக நடந்து வரும் ஒன்று. பெரிய இடத்தின் சம்பவம் என்பதனால் வெளியே வந்த இந்த சிறுமியை போன்று இன்னும் பல சிறுமிகளின் அடக்குமுறை கதைகள் வெளியே வராமலும் போகிருக்கலாம்.

அந்த மக்களின் வாழ்வாதாரத்தை சரிவர வடிவமைக்க முடியாத அரசியல் தலைமைகள் இன்று வீதிகளில் நின்று கோஷமிடுவது வெட்க கேடான ஒன்றாகும். இந்த சிறுமியின் வயது விடயத்தில் இலங்கை சட்டம் மீறப்பட்டிருந்தால் அதற்கு இலங்கை தண்டனை கோவையின் படி உயரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுடன் நியாயமான நீதி விசாரணை இந்த சிறுமியின் மரண விடயத்தில் இடம்பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

இதனை இலங்கை அரசு உறுதிப்படுத்தி இலங்கையில் இவ்வாறான செயல்கள் இனியும் நடக்காமல் தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *