
33வருடகால கல்விச்சேவையில் இருந்து ஓய்வு பெறும் அதிபர்.வேலுப்பிள்ளை.யோகராசா

(துறைநீலாவணை நிருபர் – செல்லையா.பேரின்பராசா)
கல்முனை கல்வி வலயத்திலுள்ள கல்முனை விவேகானந்தா தமிழ் வித்தியாலய அதிபராகப் பணியாற்றிய வேலுப்பிள்ளை.யோகராசா 33வருட கால கல்விச் சேவையில் இருந்து 19.09.2021ஆந் திகதி இளைப்பாறினார்.
07.08.1988ஆந் திகதி போட்டிப் பரீட்சை மூலமாக இலங்கை ஆசிரிய சேவைக்கு தெரிவான இவர் அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலம், சேனைக் குடியிருப்பு கணேசா மகாவித்தியாலயம், நற்பட்டிமுனை சிவசக்தி மகாவித்தியாலயம் என்பவற்றில் 24 வருட காலம் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
03.10.2012ஆந் திகதி போட்டிப் பரீட்சை மூலம் இலங்கை அதிபர் சேவைக்கு தெரிவான இவர் பெரிய நீலாவணை சரஸ்வதி வித்தியாலயம், கல்முனை விவேகானந்தா தமிழ் வித்தியாலயம் என்பவற்றிவல் ஒன்பது வருட காலம் அதிபராக திருப்திகரமான சேவையாற்றியவர்.
எருவில் கண்ணகி மகாவித்தியாலயம், பட்டிருப்பு தேசிய பாடசாலை என்பவற்றின் பழைய மாணவரான இவர் 1991-1992 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆரம்பக்கல்வி ஆசிரியராக பயிற்சி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக பயின்று வணிகமானி பட்டம் பெற்றார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும், தேசிய கல்வி நிருவனத்தில் விசேட கல்வி டிப்ளோமாவையும் பூர்த்தி செய்த இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் டிப்ளோமாவை பூர்த்தி செய்து தனது கல்வித்தகைமை மற்றும் தொழில் தகைமையை உயர்த்திக் கொண்டார்.
தான் ஆசிரியராக பணியாற்றிய பாடசாலைகளில் சமூகக் கல்வி, வரலாறு போன்ற பாடங்களை அழகுற கற்பித்து மாணவர்களினதும், பெற்றோரினதும் நெஞ்சங்களில் நிறைந்த ஆசிரியராவார். மிகவும் அமைதியான சுபாவம் உடைய இவர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பாடசாலைகளில் தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் அதிகளவில் சித்தி பெற கடினமாக உழைத்து கல்விப் புலத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் நன்மதிப்பை பெற்றார்.
மேலும் பாடசாலைகளின் பௌதீக வள அபிவிருத்திக்காக உழைத்ததோடு பாடசாலை சூழலில் பயன்தரு மரங்களை நட்டும், விளையாட்டு முற்றங்களை அமைத்தும், மூலிகைத் தோட்டங்களை அமைத்தும் பாடசாலை சூழலை அழகுபடுத்தினார்.
இவற்றுக்கும் அப்பால் கல்வித் துறைசார் நூல்களை எழுதி வெளியிட்டதுடன் பல கல்விக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து நடாத்தி மாணவர்கள் பயன்பெற உழைத்துள்ளார். கல்விப் பணியை அறப்பணியாக மேற்கொண்ட அதிபர் வேலுப்பிள்ளை-.யோகராசாவின் ஓய்வு காலம் சிறப்பாக அமைய இறைவனைத் துதித்து வாழ்த்துவோம்.




