தற்பொழுது நிலவும் கொவிட்-19 தொற்றுநோய் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த வாரத்தில் பாராளுமன்ற அமர்வுகளை இன்றும் நாளையும் மாத்திரம் நடத்துவதற்கும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயகவால் தீர்மானிக்கப்பட்ட நிலையில் இன்று (21) முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடியிருந்தது.
இதற்கமைய இன்றையதினம் நாடாளுமன்றில் பல விடயங்கள் தொடர்பில் காரசார விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றது.
இந்நிலையில் தேசிய ஒளடத ஒழுங்கு படுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு பதில் அளித்த துறை சார்ந்த அமைச்சர் தேசிய ஒளடத ஒழுங்கு படுத்தல் அதிகார சபையின் தரவுகளை மீள பெற முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் அதிகார சபையின் 53 வீதமான தரவுகள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளது.அதற்கான விசாரணைகளை குற்ற புலனாய்வு துறையினர் முன்னெடுத்துள்ளனர்.அழிக்கப்பட்ட தரவுகளை மீள் எடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.எனினும் அதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.
கடந்த 2015 – 2019 ஆண்டு காலத்தில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்,மற்றும் தடை செய்யப்பட்ட மருந்து விபரங்கள்,அனுமதிகள் தொடர்பிலான ஆவணங்களே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளது.கடந்த காலத்துடன் தொடர்புடைய சில சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிலையிலேயே இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இனி வரும் காலங்களில் அரச தரவுகள் அழிக்கப்படாத வகையில் மேலும் பல சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என சபையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.