தமிழ் இனத்திற்கு ராஐபச்க அரசாங்கத்தால் ஒரு போதும் நீதி கிடைக்காது! சபா குகதாஸ்

பாதிக்கப்பட்ட தமிழ் இனத்திற்கு உள்ளகப் பொறிமுறை மூலம் அதுவும் இந்த ராஐபச்க அரசாங்கத்தால் ஒரு போதும் நீதி கிடைக்காது சர்வதேச பொறிமுறைகள் மூலமே நீதி கிடைக்க வேண்டும் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில், அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் _

ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளரை நேற்று சந்தித்தபோது பல விடையங்களை வாய்மூல வாக்குறுதியாக கொடுத்துள்ளார்.

எனினும், போர்க் குற்றங்கள், மனிதப் படுகொலைகள் இனப்படுகொலைக்கான பொறுப்புக் கூற வேண்டிய தரப்பு உள்ளகப் பொறிமுறையை கையாள முடியாது. ஆகவே, இதனை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயார் இல்லை.

அத்துடன், உள்ளகப் பொறிமுறை மூலம் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதாலே பாதிக்கப்பட்ட தரப்புக்கள் அனைவருமாக சர்வதேச பொறிமுறை ஊடாக நீதியான விசாரணை வேண்டும் எனக் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

கோட்டாபய பாதுகாப்பு செயலராக இருந்தபோது உள்ளக விசாரணைப் பொறிமுறையை நிராகரித்தார்கள் தற்போது சர்வதேச நெருக்கடிகளில் இருந்து விடுபடுவதற்காக போலி நாடகம் ஒன்றை அரங்கேற்றி மீண்டும் காலத்தை இழுத்தடிக்க முயற்சிக்கிறார்கள்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவது என்பது எவ்வளவு மோசமான செயல், பொறுப்புக் கூறல் இன்றி உண்மைகளை மூடி மறைக்க முயல்கிறார்கள்.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகங்களில் இராணுவத்தினர் சிவில் உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை நீதியை பெற்றுக் கொடுக்குமா? உள் நாட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் பிரதிநிதிகளுடன் பேச முடியாது காலத்தைக் கடத்தும் கோட்டாபய வெளிநாட்டு புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் அமைப்புக்களுக்கும் தடை விதித்து விட்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பது வேடிக்கையாக இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், பாதிக்கப்பட்ட தமிழ் இனத்திற்கு உள்ளகப் பொறிமுறை மூலம் அதுவும் இந்த ராஐபச்க அரசாங்கத்தால் ஒரு போதும் நீதி கிடைக்காது சர்வதேச பொறிமுறைகள் மூலமே நீதி கிடைக்க வேண்டும். அதுவே நிரந்தர தீர்வுக்கான முடிவாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *