
ஜெனிவாவை சமாளிக்க அமெரிக்காவுக்கு கப்பம் ஐ.ம.சக்தி குற்றச்சாட்டு!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசு முயற்சிக்கின்றது. அதனால் அமெரிக்காவுக்கு கப்பம் வழங்க முயற்சிக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜெனிவா விவகாரம் தொடர்பில் தெளிவானதொரு கொள்கை இருக்க வேண்டும். ஆனால் இந்த அரசிடம் அதற்கான வேலைத்திட்டம் இல்லை. அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடனுக்குக் கூட, ‘நீ உனது வேலையை பார்’ என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கொலம்பகே எச்சரிக்கை விடுத்தார். ஆனால் இன்று என்ன நடக்கின்றது?
வெளிவிவகார அமைச்சரே மாற்றப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான தூதுவராக மஹிந்த சமரசிங்கவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதேபோன்று இலங்கையிலுள்ள வளங்களையும், வலு சக்தியையும் அமெரிக்காவுக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் தற்போது தேசப்பற்றாளர்கள் எங்கிருக்கின்றனர் என்று தெரியவில்லை.
இவ்வாறு கப்பம் வழங்கி ஜெனிவா நெருக்கடியில் இருந்து மீள முடியாது. நடுநிலையான – பலமானதொரு வெளிவிவகாரக் கொள்கை அவசியம். சமத்துவம் முக்கியம். இங்கே அரசியல் பழிவாங்கல்களைச் செய்து விட்டு, சர்வதேச மட்டத்தில் மட்டும் ஒற்றுமையை எதிர்ப்பார்க்க முடியாது. – என்றார்.