பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பது சந்தேகமே! வலி.தெற்கு தவிசாளர் ஆரூடம் 

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லாமல் இந்த பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பது என்பது கேள்விக்குறியே என வலி,தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் க.தர்ஷன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிங்கள மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் வேளை அச்சிங்கள மக்கள் தமிழர்களின் பிரச்சனைகள் பற்றியதான மனநிலை எந்தளவிற்கு மாறியுள்ளது என்பது தெரியவில்லை.

கடந்த காலங்களில் தமிழர்கள் கொல்லப்பட்டு துன்புறுத்தப்பட்ட போது பாற்சோறு பொங்கி கொண்டாடிய மக்கள், தற்போது பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதேசமயம் தமிழர்களின் பிரச்சனைகளை சிங்கள மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம் .

தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லாமல் இந்த பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பது என்பது கேள்விக்குறியாக இருக்கும் .

வடக்கு,கிழக்கு பிரதேசத்தில் இருக்கிற மக்கள் பெரும்பான்மையாக புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்றார்கள்.

இப்புலம்பெயர் மக்களின் முதலீடு நாட்டின் பொருளாதார பிரச்னைக்கு தீர்வாக அமையும் .

எனினும் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரையில் நாட்டில் முதலீட்டை வழங்க தயாராக இல்லை .

எனவே தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கினால் பல மில்லியன் டொலர்களை புலம்பெயர் மக்கள் முதலீடு செய்ய தயாராக உள்ளார்கள்

தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஜனாதிபதி அழைத்து இந்த காணி சுவீகரிப்பு பற்றி பேசிய போது அதனை இராணுவத்தளபதி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அதேவேளை, பொன்னாலை பிரதேசத்தில் இந்த காணி அபகரிப்பினை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

எனவே உண்மையான உளத்தூய்மையுடன் அரசாங்கம் தமிழர்களை அணுகுமாயின் நாட்டின் இந்த பொருளாதார பிரச்சனைகளுக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் உதவியுடன் தீர்க்க தயாராக உள்ளோம்-என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *