
அனைத்து ஜனநாயக வழிமுறைகளையும் பின்பற்றி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியை அகற்றி, 13-ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கும் 13-ஆவது சட்டத் திருத்தத்தை ஆதரிப்பதாகக் கூறிய சஜித், “நாங்கள் இரட்டை நாக்கு கொண்டவர்கள் அல்லர்” என்று தெரிவித்தார்.
“அந்த சட்டதிருத்தம் எதுவாக இருக்கிறதோ, அதை அவ்வாறே ஆதரிக்கிறோம். கவலைப்படாதீர்கள். நாங்கள் இரட்டை நாக்கு கொண்டவர்கள் அல்ல. அங்கு ஒன்றும், இங்கு ஒன்றும் பேசுபவர்கள் அல்ல.
நாங்கள் எங்கள் கொள்கையை தீவிரமாக கடைப்பிடிப்பவர்கள். எங்களின் அரசியலமைப்பின் ஒற்றையாட்சி தன்மையை 13 வது சட்டதிருத்தம் பாதிக்காது. இதை உச்ச நீதிமன்றம் தீர்மானித்தது. என் தந்தையும் 13வது சட்டதிருத்தை ஆதரித்தார். அவரது மகனாகிய நானும் அதையே தான் செய்வேன்.”
1987-ஆம் ஆண்டு இந்திய-இலங்கை உடன்பாட்டின்படி 13-ஆவது சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. எனினும் மாகாண சபைகளுக்கு பொலிஸ், நிதி போன்ற அதிகாரங்களை வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
தமிழ் அரசியல் கட்சிகள் இந்தச் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
குற்றப் பிரேரணை, நம்பிக்கையில்லாத் தீர்மானம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித்துவத்தை ஒழிப்பது போன்ற புதிய கருத்துக்களை முன்னெடுப்பது, 20-ஆம் சட்ட திருத்தத்தை திரும்பப்பெற்று, 19-ஆவதைக் கொண்டு வருவது போன்ற பல வழிகளில் நாங்கள் செயலாற்றுவதைப் பரிந்துரைக்கிறோம்.
இலங்கையில் இதுவரை இல்லாத பொருளாதர நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. நாணயத்தின் மதிப்பு சுமார் இரண்டு பங்கு வரை சரிந்திருக்கிறது.
“தற்போதைய நிர்வாகம், கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி, மற்றும் நாடாளுமன்றத்தில் இருக்கும் அவரது கூட்டாளிகள் இந்த சிக்கலை உருவாக்கியிருக்கிறார்கள்.” என்றும் சஜித் பிரேமதாச கூறினார்.

