கட்சிகளுக்கு இடையிலான புதிய ஒற்றுமை முயற்சி தொடர்பில் சிவஞானம் அதிருப்தி

ஏற்கனவே தமிழ் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை முயற்சிக்கான கூட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது ஏன் அவசரமாக மீண்டும் ஒரு கூட்டு முயற்சிக்கான கூட்டங்கள் இடம்பெறுகின்றன? என சி.வி.கே சிவஞானம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (22) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் (21) தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன், அண்மையில் நடந்த ஒற்றுமைக்கான அனைத்து கட்சிகளின் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் சி.வி.கே சிவஞானம் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டதாகவும் தான் இதோ வருகிறேன், வாகனத்தில் ஏறி விட்டேன் என கூறியதாகவும் எனினும் கூட்டம் முடியும் வரை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என தெரிவித்திருந்தார்.

அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கட்சியின் தலைவரோ அல்லது கட்சியோ என்னை பணிக்கவில்லை.

அதன் காரணமாகவே நான் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

கடந்த வருட இறுதிப் பகுதியிலிருந்து ஒற்றுமைக்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

அந்தக் கூட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து, பல கூட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் புதிதாக ஏன் இந்த கூட்டு முயற்சி இடம்பெறுகின்றது? என நான் கேட்க விரும்புகின்றேன்.

ஏன் இவ்வாறு அவசரப்பட்டு மீண்டும் கட்சிகளை ஒன்றிணைக்கிறோம் என கூட்டங்கள் கூட்டுகிறார்கள்? என கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *