
கொழும்பு,ஏப் 26
எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கருப்புப் பட்டி அணிந்து, தொழிலில் ஈடுபடுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரியுள்ளது.
அதன் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதேவேளை, 28 ஆம் திகதி, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஜனநாயக ரீதியான உரிமைகளை நாடாளுமன்றத்துக்கு வழங்குமாறு அனைவரும் கோரிக்கை விடுப்பதாக கூறியுள்ளார்.
அவ்வாறே, எதிர்வரும் 28ஆம் திகதி ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் சேவைப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தியுள்ள அந்த சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

