
நியூயார்க்,ஏப் 26
உலகில் மனிதர்களின் செயல்பாடுகளால் கார்பன்-டை-ஆக்சைடு எனப்படும் கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து உள்ளது. இதனால், பூமியின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து வானிலை மாற்றம், துருவ பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள், பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட ஆபத்து தரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த பருவகால மாற்றங்களால் உலக அளவில் உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்வியல் முறையில் பெரும் பாதிப்புகளும், அழிவுகளும் ஏற்பட்டு விடும்.
வருங்காலத்தில் மிக அபாய அளவை எட்டும் வகையில் வெப்பநிலை உயர்வை தவிர்க்க என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது பற்றி கடந்த 2018ம் ஆண்டில் ஐ.நா. பருவநிலை மாற்ற அறிவியல் குழு பட்டியலிட்டது.
அதில், மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் விவசாயம் மூலம் வெளியாகும் பூமியை வெப்பமாக்கும் வாயுக்களை 2030ம் ஆண்டுக்குள் பாதியாக குறைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
வரக்கூடிய தசாப்தங்களில் பத்து லட்சம் விலங்கு, பூச்சி மற்றும் தாவர இனங்கள் அழிவை எதிர்நோக்கியுள்ளன என்று அறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
நகரங்களின் வளர்ச்சி, விவசாயத்துக்காக வனங்கள் அழிப்பு, உணவுக்காக மீன் தேவை அதிகரிப்பு ஆகியவற்றால் முக்கால் பகுதி நிலம் மற்றும் மூன்றில் இரண்டு பங்கு கடல் வளத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்த சூழலில் ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று, வரும் ஆண்டுகளில் பூமியானது முன்பிருந்த நிலையை விட மிக அதிக பேரழிவுகளை எதிர்நோக்க வேண்டிய அபாய நிலையில் உள்ளது என சுட்டிக்காட்டி உள்ளது.
2030ம் ஆண்டில் தீவிர வெப்ப அலைகளின் எண்ணிக்கையானது, 2001ம் ஆண்டில் இருந்ததுபோல் 3 மடங்கு இருக்கும். 30 சதவீதம் அதிக வறட்சி நிலையும் காணப்படும். இயற்கை பேரிடர்கள் மட்டுமின்றி கொரோனா பெருந்தொற்று, பொருளாதார சரிவு மற்றும் உணவு பற்றாக்குறை ஆகிய அனைத்தும் இந்த பருவகால மாற்ற எதிரொலியாக நடைபெறும் என்று அறிக்கை தெரிவித்து உள்ளது.

