
பி.சி.ஆர். பரிசோதனை செய்யாது உறவினரிடம் உடல் ஒப்படைப்பு! வவுனியாவில் மக்கள் அதிருப்தி!
வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்க சடலம் ஒன்று, பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படாது மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், தனிநபர்களுக்கு உள்ள செல்வாக்குக் காரணமாக வழமையான செயற்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
உயிரிழப்பவர்களின் சடலங்கள் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு, பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தும் நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருகின்றது.
வவுனியா, பட்டானிச்சூரில் வசித்த பெண் ஒருவர் கட ந்த சனிக்கிழமை உயிரிழந்தார். அவரது உடலை மருத்துவமனையில் ஒப்படைப்பதற்காக சுகாதாரப் பிரிவினர் வாகனம் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் அந்த வாகனத்தைத் திருப்பி அனுப்பிய உறவினர்கள், வவுனியா நோயாளர் காவு வண்டிமூலம் சடலத்தை வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பினர் என்று கூறப்படுகின்றது.
வவுனியா மருததுவமனையில் ஒப்படைக்கப்பட்ட சடலம், வழமையாக மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனை இன்றி சடலம் மீண்டும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது. வைத்தியசாலையில் உள்ள அதிகாரிகளின் செல்வாக்குக் காரணமாகவே இவ்வாறு நடந்துள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ள பொதுமக்கள், அதிகார பலமற்ற சாதாரண மக்களே அனைத்து விடயங்களிலும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.