
விதை இறக்குமதியையும் குறைப்பதற்கு அரசு முடிவு!
விவசாய நடவடிக்கைக்குத் தேவையான விதைகளை இலங்கையிலேயே உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த வருடம் முற்பகுதியில் விதைகள் இறக்குமதியை 50 வீதத்தால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
இலங்கைக்குள்ளேயே பல வகையான விதைகளை உற்பத்தி செய்ய முடியும். எனினும், இறக்குமதி பொருளாதாரத்துக்கு பழக்கப்பட்டுள்ளதால் விதைகள் இறக்குமதிக்கு மட்டும் வருடாந்தம் 2 பில்லியன் ரூபா செலவளிக்கப்படுகின்றது.
எனவே, விதைகளை மட்டுமல்ல இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து வகையான உணவுப் பொருள்களையும் இங்கேயே உற்பத்தி செய்வதுதான் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டமாகும்.
முதற்கட்டமாக முதல் மூன்று வருடங்களுக்குள் கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் மிளகாயை இலங்கைக்குள்ளேயே உற்பத்தி செய்வதுதான் எமது திட்டமாகும். குறிப்பாக ஒரு வருடத்துக்குள் மிளகாய் இறக்குமதி தடுக்கப்படும். தம்புள்ளை பகுதியில் வெங்காயத்துக்கான விதையும், நுவரெலியாவில் கிழங்குக்கான விதையும் உற்பத்தி செய்யப்படும். இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து விதைகளும் உற்பத்தி செய்யப்படும். அடுத்த வருட முற்பகுதியில் விதை இறக்குமதி 50 வீதத்தால் குறைக்கப்படும், என்றார்.