
மாணவர்களுக்கான தடுப்பூசித் திட்டத்தில்
உயர்தர மாணவர்களுக்கு முன்னுரிமை!
மாணவர்களுக்கான தடுப்பூசித் திட்டத்தில் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். அவர்களுக்கு பைஸர் தடுப்பூசியே ஏற்றப்படும் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
ஆரம்பத்திலேயே சபையின் கவனர்த்தை ஈர்த்த ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க, உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை நிறைவுசெய்யமுடியாமல் உள்ளது. எனவே, அவர்களுக்கான நிவாரணத் திட்டம் பற்றி ஆராயப்பட வேண்டும் – என்று சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, இது தொடர்பில் விரிவானதொரு விளக்கத்தை எதிர்காலத்தில் வழங்குவேன். பரீட்சைகள் ஆணையாளருடன் அது பற்றி கலந்துரையாடப்பட்டுவருகின்றது என்றார்.
இதனையடுத்து எழுந்த சம்பிக்க ரணவக்க, உயர்தர மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியே ஏற்றப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர், இது தொடர்பில் ஜனாதிபதி கடந்த வாரமே கட்டளையொன்றை பிறப்பித்துள்ளார். இதன்பிரகாரம் சுகாதார மற்றும் கல்வி அமைச்சுகள் பேச்சுகளை ஆரம்பித்துள்ளன. முதலாவதாக உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றப்படும். இதற்கான வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளது – என்றார்.