இக் கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டம், சர்வதேச மனித உரிமை நியமங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு இருந்தால், தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைத்திருக்கப்பட மாட்டார்கள் என இன்று நடைபெற்ற சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தமை வருமாறு:-
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு கடந்த 12 ஆம் திகதி பதவியிலிருந்த சிறைச்சாலை மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் சென்று, அதிபயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த 10 தமிழ் அரசியல் கைதிகளை (ஒன்பது பேர் சந்தேக நபர்கள்) முழந்தாளிட்டச் செய்து கைத்துப்பாக்கியை எடுத்து, தனக்கு இந்த அமைச்சு பதவியை வழங்கி வைத்தபோது, இந்த சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கும் அல்லது சுடுவதற்கும் உரிய அதிகாரத்தையும் பெற்றுக்கொண்டதாக எக்காளமிட்டு கூறி, அச்சுறுத்தியுள்ளார்.
இதன்போது, அதுவரை பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்த சிறைச்சாலைக்கு பொறுப்பான அதிகாரிகளும், குறித்த நபரின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து, தன்னிலைமீறி ஆத்திரத்துடன் நின்ற அமைச்சரை சமாதானப்படுத்தி, அவ்விடத்தில் இருந்து அகற்ற முயற்சி செய்துள்ளனர்.
மிகுந்த எத்தனத்தின் பின்னரே அவர் சிறைச்சாலை வளாகத்தில் இருந்து வெளியே அழைத்து செல்லப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, கடந்த 16 ஆம் திகதி நானும் எனது சக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் சம்பவம் நடைபெற்ற அனுராதபுர சிறைச்சாலைக்கு நேரடியாக விஜயம் செய்து, இந்தச் சம்பவம் குறித்து மேலதிக தகவல்களை அறிந்து உறுதிப்படுத்திக்கொண்டோம்.இச் சம்பவம், குறித்து வெளியுலகிற்கு தெரியப்படுத்த நாம் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு முடிவடைந்த சிலமணி நேரங்களில், அனுராதபுர சிறைச்சாலையில் நடந்த சம்பவத்திற்கான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, தனது சிறைச்சாலை மற்றும் கைதிகள் புனர்வாழ்வு குறித்தான தனது இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து லொகான் ரத்வத்த இராஜினாமா செய்திருப்பதாகவும், அதை ஜனாதிபதி ஏற்றிருப்பதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும், சிறைக்கைதிகளின் உரிமைகளை உறுதிப்படுத்துகின்ற சர்வதேச சட்டங்களான, மனித உரிமைகளுக்கான சர்வதேச பிரகடனம், குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளிற்கான சர்வதேச சாசனம், சித்திரவதை மற்றும் ஏனைய துன்புறுத்தல்கள், மனிதத்துவம் அற்ற, கீழ்நிலைப்படுத்தும் நடவடிக்கை மற்றும் சித்திரவதைகளிற்கு எதிரான சாசனம் போன்றவற்றில் இலங்கையும் கைச்சாத்திட்டிருக்கின்றது.
நெல்சன் மண்டேலா சட்டம் என பொதுவாக அறியப்படுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் சிறைக்கைதிகளை பரிபாலனை தொடர்பிலான ஆகக் குறைந்த நியமங்கள் (SMR) குறித்த சட்டம் மற்றும் அதனோடு இணைந்த பிற சர்வதேச சட்ட நியமங்கள் என்பனவும் அடங்கும்.
இராஜாங்க அமைச்சராகவிருந்த குறித்த நபரின் இந்த நடவடிக்கையானது, சட்டவிரோதமானது என்பதை மட்டுமல்ல, இதுபோன்ற குற்றத்தை இழைத்த குற்றவாளிக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகின்றது. அத்தோடு, சிறைக்கைதிகள், தமது வீடுகளுக்கு அண்மையாக உள்ள சிறைச்சாலைகளில் வைத்துப் பராமரிப்பதையும் மேற்கூறிய சட்டங்கள் வலியுறுத்துகின்றன.
இந் நபர் இழைத்த குற்றவியல் நடத்தையின் பரிமாணத்தின் அடிப்படையில் அவர் சிறைச்சாலை மற்றும் சிறைக்கைதிகள் விவகார அமைச்சராக இருப்பதற்கு மட்டுமல்ல, எந்தவொரு அமைச்சுப் பதவியில் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலோ இருக்க முடியாதவர் ஆகின்றார். அதன் அடிப்படையில், அவர் எந்தவொரு அமைச்சுப்பதவியிலும் இல்லாது இருப்பதையும் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்படுவதையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ளுமா? ஏன்றும், இவரின் இந்தச் செயற்பாடு குறித்தும் மீறப்பட்ட சட்டங்களின் அடிப்படையிலும், அவரை கைது செய்யவும் பொருத்தமானா சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் சட்டமா அதிபரிற்கு எந்தவொரு புற அழுத்தமும் வழங்கபடாது இருப்பதை இந்த அரசாங்கம் உறுதிப்படுத்துமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந் நபரின் சட்டவிரோத நடவடிக்கைகளை அனுராதபுர சிறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தத் தவறியமையால் பயங்கவராத தடுப்புச் சட்டத்தின் பெயரால் அனுராதபுரத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிரிற்கும் பாதுகாப்பிற்கும் ஏற்பட்டிருக்கும் பாரிய அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டும், சிறைக்கைதிகள் தொடர்பிலான சர்வதேச சட்டமான நெல்சன் மண்டேலா சட்டம் (SMR) வலியுறுத்துவதன் அடிப்படையிலும், இந்த தமிழ் அரசியல் கைதிகளை யாழ்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைக்கு எதுவித காலதாமதமும் இன்றி யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகளை நீதி அமைச்சர் உடனடியாக எடுப்பாரா என்றும்,முன்னைய அரசாங்கங்களை போலவே, இந்த அரசாங்கமும் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொடூரமான இயல்புகளைக் கொண்டுள்ளது என்பதை ஏற்றுள்ளமையின் அடிப்படையில் இந்த கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டம், ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமை நியமங்களின் அடிப்படையிலும் உரிய நடைமுறைகளின் அடிப்படையிலும் வடிவமைக்கப்பட்டு இருந்தால், எந்தவொரு தமிழ் அரசியல் கைதிகளும் தடுத்து வைத்திருக்கப்பட மாட்டார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு, இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க, இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? என்றும் நீதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.