இதுவரை கிடைக்கப்பெற்ற கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கையையும் செலவுகளையும் வெளியிட்டது அரசு

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இதுவரையில் ஒரு கோடியே 21 இலட்சத்து 59 ஆயிரத்து 930 தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவற்றுக்கான பெறுமதி 15 ஆயிரத்து 460 மில்லியன் ரூபாவாகும் என ஒளடத உற்பத்திகள், விநியோக ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இதுவரை இலங்கை பெற்றுக்கொண்டுள்ள தடுப்பூசிகள், அதற்காக செலவழிக்கப்பட்டுள்ள நிதித்தொகை குறித்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் இலங்கையில் மக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆசியாவில் நாமே விரைவாக தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டுள்ளோம் என உறுதியாக கூற முடியும். இப்போது வரையில் இலங்கைக்கு ஒரு கோடியே 21 இலட்சத்து 59 ஆயிரத்து 930 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவற்றில் 91 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளும், 15 இலட்சத்து 10 ஆயிரம் மொடேனா தடுப்பூசிகளும், 12 இலட்சத்து 64 ஆயிரம் அஸ்டசெனிகா தடுப்பூசிகளும், ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ஸ்புட்னிக் தடுப்பூசிகளும், ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 830 பைசர் தடுப்பூசிகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள இதுவரையில் 77.3 மில்லியன் அமெரிக்க டொலர் செலவழித்துள்ளோம்.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் பார்த்தல் 15 ஆயிரத்து 460 மில்லியன் ரூபாவாகும். ஆகவே மக்களின் பாதுகாப்பிற்காக இப்போது வரையில் 15 பில்லியன் ரூபாவை செலவு செய்து மக்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தி வருகின்றது, என்றார்.

Leave a Reply