
வீரகெட்டிய பகுதியில் 14 வயது சிறுவன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது!
பிரதான சந்தேகநபரும் மற்றுமொரு சந்தேகநபரும் காட்டில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார். குடும்பத்தகராறு காரணமாக இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் உயிரிழந்தார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.