
காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டனரா? கோத்தாபயவிடம் கேட்கிறார் சுரேஷ்!
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச்சான்றிதழை வழங்க இலங்கை ஜனாதிபதி முன்வந்திருப்பதன் மூலமாக, காணாமலாக்கப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனரென்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளாரா? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச்சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுத்துவருகின்றேன்” என்று, ஐ.நா. பொதுச் செயலாளருடனான சந்திப்பின்போது இலங்கை ஜனாதிபதி கூறியுள்ளாரென்று அவரது ஊடக அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. எனவே, அவர் இலங்கை திரும்பியவுடனேயே இத்தகைய அறிவிப்பை முதலில் திட்டவட்டமாக, பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.
இலங்கை அரசின் தகவல்படி வடக்கு கிழக்கில் 16ஆயிரம் பேர் வரையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பெருமளவிலானோர் இலங்கையின் முப்படைகளாலும் பொலிஸாராலும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களே. காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதிவேண்டி கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக உறவுகள் போராடிவருகின்றனர்.
ஆனால், தனது ஆட்சிக்காலத்தில் அவர்களை ஒருமுறையேனும் பேச்சுக்கு அழைத்திராத இலங்கை ஜனாதிபதி, உள்ளகப் பொறிமுறையில் பேச்சில் ஈடுபடப்போகின்றேன் என்று அறிவித்துள்ளார்.இலங்கை ஜனாதிபதி ஐ.நா. பொதுச்செயலாளரையும் சர்வதேசத்தையும் இதன்மூலம் ஏமாற்ற முற்பட்டுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது. ஆனால், ஐ.நா. பொதுச்செயலாளரோ அல்லது சர்வதேச சமூகமோ காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி அறியாமலில்லை என்பதை முதலில் இலங்கை ஜனாதிபதி புரிந்துகொள்ளவேண்டும்.
காணாமலாக்கப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் என்பதை இலங்கை ஜனாதிபதி முதலில் பகிரங்கமாக அறிவிக்கட்டும். அதன்பின்னர் இலங்கை அரச படைகளாலும் பொலிஸாராலும் காணாமலாக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளமை பற்றி நாம் சர்வதேசத்திடம் நீதி கோருவோம். – என்றார்.