தொற்றுக்குள்ளான மனைவியை சொத்துக்காக கொலை செய்த வர்த்தகர்

கொழும்பு, பொரலஸ்கமுவ பிரதேசத்தில் சொத்துக்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கொவிட் தொற்றுக்குள்ளான மனைவியை படுக்கையில் வைத்து கொலை செய்த வர்த்தகர் ஒருவரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவரது மனைவியின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பாதி எரிந்த தலையணை மற்றும் பேப்பர்களையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்

பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய கலனி யஸின்தா மாபலகமகே என்பவரே உயிரிழந்தார். மேலும், இந்த தம்பதிக்கு 13 வயதில் மகன் ஒருவரும் 6 வயதில் மகள் ஒருவரும் உள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பெண் கொவிட் தொற்றுக்குள்ளான காரணத்தால் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 15ஆம் திகதி இரவு 10 மணியளவில் தனது மனைவி உறக்கத்திலேயே உயிரிழந்தார் என அவரது சகோதரனுக்கு தொலைபேசி அழைப்பெடுத்தி கணவர் தெரியப்படுத்தியுள்ளார்.

சகோதரன் சம்பவ இடத்திற்கு வந்தவுடன் சடலம் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, அவரது உடலில் கொவிட் தொற்று தொடர்ந்து காணப்பட்டுள்ளது.

இந் நிலையில், சகோதரியின் கணவனின் செயற்பாடுகள் சந்தேகத்திற்கிடமாக இருந்ததாகவும், அவரது கழுத்தில் சிறிய கீறல்கள் காணப்பட்டதாகவும் அதனை மறைப்பதற்காக அவர் முயற்சித்துள்ளார் எனவும் சகோதரன் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக சந்தேகமடைந்த சகோதரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையில் இந்த பெண் மூச்சடைத்து கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

மனைவியின் சொத்துக்களை பெற்றுக் கொண்டு வேறு பெண்ணுடன் வாழ்வதற்கு திட்டமிட்டே கணவன், கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *