
கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட விவகாரம், குற்றம் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை! கிளிநொச்சி மாவட்டச் செயலர் தெரிவிப்பு!
கிளிநொச்சியில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை அவருடைய வீட்டுக்கு முன்பாகக் கொண்டுபோய் வைத்து அஞ்சலி செலுத்திய விவகாரத்தில், அதிகாரிகளிடத்தில் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டார் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிளிநொச்சி மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இது தொடர்பில் வினவியபோதே மாவட்டச் செயலர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்லவோ கையாளவோ சுகாதாரத் தரப்பைத் தவிர்ந்த வேறு எவருக்கும் அனுமதியில்லை. அவ்வாறு இந்த விவகாரத்தில் எந்த முறைப்பாடும் கிடைக்கப்படவில்லை. அதிகாரிகளின் தவறு இதில் இருந்தால், முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் – என்றார்.