யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று காலை மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலக பிரிவு ரீதியாகவும் இனங்காணப்பட்டு, நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வரும் வீதிஅபிவிருத்தி, வீடமைப்பு, வாரிசௌபாக்கியா செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளின் தற்போதைய நிலை மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக இணைய நிகழ்நிலை ஊடாக விரிவாக கலந்துரையாடப்பட்டது .
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் :–
கிராமத்துடனான கலந்துரையாடலுக்கான முன்னாயத்த செயற்பாடுகளை மேற்கொள்ள பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியமையுடன், சமுர்த்தி திணைக்களத்துடன் இணைந்த வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்பாடுகளை உரிய திணைக்களங்கத்துடன் இணைந்து விரிவுபடுத்தவும், வீட்டுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பெற்ற வீட்டுத்திட்ட உதவிகளை பெற்று தற்போது அவற்றை பயன்படுத்தாத பயனாளிகளின் விபரங்களை பிரதேச செயலாளர்கள் மீள அறிக்கையிடும்படியும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
மேலும், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள், மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளல், அவற்றின் செயற்பாடுகளை விரைவுபடுத்தல் தொடர்பாகவும் அரசாங்க அதிபர் இதில் தொடர்புடைய தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாவட்ட பொறியியலாளர், பிரதம கணக்காளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.