யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலய பாடசாலை மீது 1995ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்கள் உட்பட 39 பேரின் 26 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று பிற்பகல் தமிழ் தேசிய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சி பொது செயலருமான எம்.கே.சிவாஜிலிங்கம் ஈகைச் சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தினார்.
1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் மாணவர்கள் தமது பாடசாலை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வேளையில், விமானப்படையின் புக்காரா விமானத்தால் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 21 மாணவர்கள் பலியாகினர். பலர் படுகாயங்களுக்குள்ளாகினர்.
மேலும், விமானத்தின் சத்தத்தைக் கேட்ட மாணவர்கள் பயத்தால் ஒரு மரத்தின்கீழ் நின்றவேளை, மரத்தின்மீது விழுந்த குண்டால் அந்த இடத்திலேயே 21 மாணவர்கள் உடல் சிதறிப் பலியானதுடன், பொது மக்கள் 18 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.