
தமிழர்களை அழிக்கும் சுமந்திரன் எம்.பி. பதவியைத் துறக்கவேண்டும்!காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்து!
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாது, தமிழர் தரப்பை அழிக்கிறார். தமிழர்களின் எதிரிபோல் செயற்படுகின்றார். எனவே, நிலுவையிலுள்ள இராஜினாமாக் கடிதத்தை முடித்து எங்களைத் தனியாக விட்டுவிடுமாறு சுமந்திரனிடம் கேட்கிறோம். இவ்வாறு வலியுறுத்தினர், காணாமலாக்கப்பட்டவர்களின் வடக்கு கிழக்கு உறவுகளின் சங்கத்தினர்.
குறித்த விடயம் தொடர்பாக வவுனியாவில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான திறவுகோல் ரோம் சாசனத்தில்தான் உள்ளதே தவிர, காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்திடம் இல்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தில் உறுப்பினராக்க வேண்டும். அதன்பின்னர் போர்க்குற்றம் செய்தனர் என்று நினைக்கும் எவர் மீதும் சுமந்திரன் வழக்குப்பதிவு செய்யலாம்.
ரோம் சட்டத்தில் இலங்கை கையெழுத்திட்ட பின்னர், எங்கள் ஒரு லட்சத்து 46 ஆயிரம் தமிழர்களைக் கொன்றவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கு நாம் தயாராகலாம். மேலும், 90 ஆயிரம் விதவைகளையும், 50 ஆயிரம் ஆதரவற்றோர் மற்றும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை காணாமற்செய்தவர்களுக்கும் நாங்கள் வழக்குத் தாக்கல் செய்வோம்.
தமிழர்களையும் விசாரிக்க வேண்டும் என்று சுமந்திரன் கூறுகிறார். நீதி பெறுவதற்கான சிறந்த வழி அவர்கள் அனைவரையும் விசாரிப்பது என்றும் கூறுகிறார். அனைத்து தரப்பினரையும் விசாரணைக்குக் கொண்டுவருவதன் மூலம் சுமந்திரன், தனது வழக்கு வலுப்பெறும் என்று கூறுகிறார்.
அவர் இங்கே என்ன பேசுகிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்களான நாங்கள் கூறுகிறோம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது நண்பர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர், இலங்கையை ரோம் சட்டத்தில் கையெழுத்திடச் செய்யவேண்டும். ரோம் சட்டத்தில் கையெழுத்திடாமல் நீதி வழங்கப்படாத நிலைமையே உள்ளது. எனவே, இந்த விடயத்தில் மழுப்ப வேண்டாம் என்று சுமந்திரனிடம் கேட்கிறோம்.
சில செயல்களைச் செய்துகாட்டுங்கள். ரோம் சட்டத்தில் கையெழுத்திடுமாறு இலங்கையைக் கோர உங்களால் முடியாவிட்டால், தயவுசெய்து தமிழர்களை விட்டுவிட்டு உங்கள் வீட்டுக்குத் திரும்புங்கள். சுமந்திரன் இப்பொழுது வெளியேறினால், அவர் எங்களுக்குச் செய்த தீங்குகளை கடவுள் மன்னிப்பார். – என்றனர்.