மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில் மோட்டை அரச காணியில் சுமார் 40 வருடங்களாக வேளாண்மை செய்து வருகின்ற நிலையில் குறித்த அரச காணியை தங்களுக்கு வழங்க வேண்டுமென உண்ணாவிரதம் உட்பட்ட பல போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த நிலையில், வடக்கு மாகாண ஆளுநரால் குறித்த காணியை கோயில்மோட்டை விவசாயிகளுக்கு வழங்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
மறுபுறம் குறித்த காணி தங்களுக்கு வேண்டுமென மடு தேவாலய பரிபாலன சபையினர் கோரிவந்ததுடன் தென்னிலங்கை அமைச்சர்கள் மற்றும் வடக்கு மாகாணத்தை மீறி காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம் போன்றவற்றை நாடியதுடன் வடக்கு மாகாணத்திற்கு இருக்கும் அற்ப சொற்ப அதிகாரங்களையும் குறைக்கும் விதமாக நடந்து கொண்டனர்.
இந்நிலையில்தான் மன்னார் திருக்கேதீசஸ்வர ஆலயத்தில் கொரோனா இல்லாத இலங்கை உருவாக வேண்டுமென இடம்பெற்ற விஷேட பூஜையில் பங்கேற்க பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர்
ஞானசாரதேரர் மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில் இடைவழியில் வழிமறித்த விவசாயிகள் தங்களின் காணிப்பிரச்சினையை தீர்த்து தருமாறு கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் கோயில்மோட்டை வயல் காணிக்கு நேரடியாக சென்று பார்வையிட்ட ஞானசாரதேரர்.
தொடர்ந்து தேவாலயங்களுக்கு காணிகளை வழங்குவதைவிட மக்களின் பசியை தீர்ப்பதே முக்கியம் என தெரிவித்ததுடன், குறித்த காணியை கோயில் மோட்டை விவசாயிகளுக்கு பெற்றுத்தர தான் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.