மட்டக்களப்பில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை, 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றும் நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவான இளைஞர், யுவதிகள் தடுப்பூசி ஏற்றும் நிலையங்களுக்கு ஆர்வத்துடன் சென்று தடுப்பூசிகளைப் பெற்று வருகின்றனர்.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கூழாவடி விக்னேஸ்வரா திருத்தொண்டர் மண்டபத்திலும், புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயம், மட்டக்கள்பபு இந்துக்கல்லூரி, கல்லடி சிவானந்தா வித்தியாலயம் ஆகிய பகுதிகளிலும் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரனின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கிரிசுதனின் தலைமையில் நடத்தப்பட்டது.
பெருமளவான இளைஞர், யுவதிகள் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதற்கு ஆர்வத்துடன் வந்ததாகவும் அறியமுடிந்தது.
அத்தோடு, இதுவரையில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாத மற்றும் இரண்டாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டனர்.





