நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்து, பொறுப்பு கூறும் கடப்பாட்டை சர்வதேசத்திற்கு முன்பாக நிறைவேற்றும்படி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.
அனுராதபுரம் சிறையில் அண்மையில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவம் பற்றி விசாரணை நடத்த அரசாங்கத்தால் அமைக்கப்படும் குழு ஊடாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை பரிந்துரைக்கும்படி அவர் வலியுறுத்தினார்.
மேலும், இச் சம்பவங்கள் காரணமாகவே அரசாங்கம் இன்று சர்வதேசத்திற்கு முன்பாக பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கின்றது.
1989 களில் ஏற்பட்ட கறுப்பு ஜுலைக் கலவரத்திற்கும் நாங்கள் எதிர்ப்பையே வெளியிடுகின்றோம். அது இன்றும் பிழை என்றே தெரிவிக்கின்றோம்.
1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற கொலையைப் போன்றே அனுராதபுரம் சிறையிலும் இடம்பெற வாய்ப்பிருந்தது.
இராஜாங்க அமைச்சர் அனுராதபுரம் சிறைக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகள் மீது துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியது முற்றிலும் பிழை.
இதனிடையே, இச் சம்பவத்தை இனவாதமாக தமிழ் உறுப்பினர்கள் பயன்படுத்துவதாக விமர்சனம் வெளியிடுவதை நாங்கள் ஏற்கமுடியாது.
நான் அன்று அந்தச் சிறைக்குச் சென்றபோது சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருடன் சென்றேன். ஆகவே, இதை இனவாத நடவடிக்கையென்று திசைதிருப்ப வேண்டாம்.
இதுபோன்ற, அறிவிப்புக்கள் காரணமாகவே இன்று சர்வதேசத்திற்கு முன்பாக இலங்கை விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பில், நீதியமைச்சர் அலிசப்ரி இன்று பதிலளிக்கையில், இதுகுறித்த, விசாரணைகளை நடத்துவதாக தெரிவித்தார்.
ஆனால், 89களில் இடம்பெற்றது போலவும், அண்மையில் திகன பகுதியில் இடம்பெற்றது போல கலவரச் சம்பவம் அல்ல. இது அப்பட்டமாகவே இடம்பெற்ற சம்பவமாகும்.
தமிழ் சமூகத்துடன் பேச்சுக்குத் தயார் என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்த போதிலும் இதுபோன்ற அமைச்சர்களின் செயற்பாடுகள் காரணமாகவே மனித உரிமை மீறல் பிரச்சினைகள் உருவெடுக்கின்றன.
ஆகவே, இப்போதாவது இலங்கை அரசாங்கம் இப் பிழைகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்து, சர்வதேசத்திற்கு முன்பாக பொறுப்புகூறலை உறுதிசெய்யவும். தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முயற்சிக்கவும் என்று தெரிவித்துள்ளார்.





