அரசாங்கத்தினால் கொரோனா எதிர்ப்பு தடுப்பூசிகளை ஏற்றும் பணிகள் நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள போதும் தொடர்ந்தேர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.மயூரனின் வழிகாட்டலில் மாவட்டத்தில் உள்ள பதினான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ரி.எஸ்.சஞ்ஜீவ் தலைமையில் இடம் பெற்று வருகின்றது.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இருபது வயது மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு முதலாம் கட்ட தடுப்பூசியும் முப்பது வயது மேற்பட்ட பொதுமக்களுக்கு இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் வாழைச்சேனை விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
தடுப்பு ஊசி ஏற்றும் பணியில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு பிரிவினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.



