
டெல்டா வகை கொரோனா வைரஸ் திரிபு உலகில் மிக அதிகமான இடங்களில் பரவிவருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது 1 வீதத்திற்கும் குறைவாகவே ஆல்பா, பீட்டா, காமா வகை வைரஸ்கள் பரவுவதாக அந்த அமைப்பின் கொவிட்-19 குழு தெரிவித்தது. டெல்டா வகை வைரஸின் வீரியம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உலக அளவில் இன்னும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டால், அந்த வகை வைரஸ் பரவும் அளவு வரம்பை எட்டக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
இந்நிலையில், எட்டா, அயோட்டா, காப்பா ஆகியன கண்காணிக்கப்படும் வைரஸ் ரகங்களாகத் திருத்தி வகைப்படுத்தப்படுள்ளன.
மற்ற வகை வைரஸ்களை விட அவை அவ்வளவாக பரவாமல் இருப்பது அதற்குக் காரணம்.
ஆரம்பத்தில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா திரிபு தற்போது உலகெங்கும் பரவி உள்ளது. எனினும் வைரஸ் திரிபு முதலில் கண்டுபிடிக்கப்படும் நாடுகளை குறிப்பாக அடையாளப்படுத்துவதை தவிர்க்கும் வகையில் அவைகளுக்கு கிரேக்க எழுத்துகளில் பெயர் சூட்ட உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
