‘நாங்கள் வாழ்வது ஆசியாவின் அதிசயம், கனவு யாழில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்’ எனவும் இங்கு இப்படியான அதிசயங்களை எல்லாம் பார்க்க வேண்டி இருக்குமேயானால், நாங்கள் இதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றும் த. தே.ம.முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஸ் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனை கைது செய்தமைக்கு கண்டனம் தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தீபம் ஏற்றி, அஞ்சலி செலுத்த முற்பட்டவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனையும், யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ரகீம் மற்றும் ஆதரவாளர் ஒருவரையும் பொலிஸார் மிருகத்தனமாகத் தாக்கி கைது செய்துள்ளனர்.
மேலும், அங்கு நின்ற எங்கள் கட்சியின் பெண் உறுப்பினர்களையும் தாக்கி, அவர்களின் தொலைபேசிகளையும் பொலிஸார் அடாவடியாக கைப்பற்றயுள்ளனர்.
அதுமட்டுமின்றி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை தாக்கி, ஒரு நாயை பிடித்து இழுத்து வாகத்தில் ஏற்றுவது போல் ஏற்றி வந்து, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
மேலும், அவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.
அங்கு சென்ற எங்களை, ஒரு சட்டத்தரணியை எவ்வாறு நடத்த வேண்டும் என பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தும், அதை மீறி பொலிஸார் அராஜகம் நடத்துகிறார்கள்.
மேலும், இக் கைது சட்ட விரோதமானது என்றும், நீதிமன்றத்தின் கட்டளை இன்றி இக் கைது இடம்பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்சமயம், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஒரு கட்டளையை பிறப்பித்துள்ளது. ஆனாலும், அது நாளைய தினத்தில் இருந்தே நடைமுறைக்கு வரும் என்று தெரியவந்துள்ளது.
எனினும், நாளைய தினத்தில் இருந்து அமுலாகும் கட்டளையை வைத்து, எவ்வாறு இன்றைய தினம் ஒருவரை கைது செய்ய முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
ஆகவே, நாங்கள் வாழ்வது ஆசியாவின் அதிசம், கனவு யாழில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் எனவும் இங்கு இப்படியான அதிசயங்களை எல்லாம் பார்க்க வேண்டி இருக்குமேயானால், நாங்கள் இதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்