விவசாயத் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

இரசாயன உர இறக்குமதிக்கு ஆய்வு ஏதுமின்றி தடை விதித்த ஜனாதிபதியின் முடிவால் விவசாயிகளுக்கும், நாட்டின் விவசாயத் துறைக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி எரந்த வெலியங்கே, சட்டத்தரணி தாரக நாணயக்கார மற்றும் கொதாகொட விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் திலக் அமரதிவாகர ஆகியோரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, முன்னாள் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் பேராசிரியர் உதித ஜயசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நாட்டின் மக்கள் தொகையில் 28 சதவீதம் பேர் விவசாயத்தை நேரடியாகவும், 42 சதவீதம் பேர் மறைமுகமாகவும் நம்பியிருப்பதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

இலங்கைக்கு இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விதித்த தடை காரணமாக, நாட்டின் விவசாயம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சரியான திட்டமிடல் இன்றியும் நிபுணர் ஆலோசனைகள் மற்றும் ஆய்வுகள் இன்றியும் இரசாயன உர இறக்குமதியை தடை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *