உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள், நடைமுறையில் உள்ள நாசகார பொருளாதார கட்டமைப்பை வீழ்த்தி, உழைக்கும் மக்கள் அதிகாரத்தை நோக்கி புரட்சிகர மே தினத்தில் அணிதிரள்வோம் என்ற கோசத்தினை முதன்மைப்படுத்திப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மேதின முன்னெடுப்புகள் எதிர்வரும் மே முதலாம் திகதியன்று வவுனியாவில் இடம்பெறவுள்ளன.
குறித்த தினத்தில் பி.ப. 2.30 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மேதினப் பேரணி ஆரம்பமாக உள்ளதுடன், மேதினப் பொதுக்கூட்டம் பி.ப. 4 மணியளவில் பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
கட்சியின் வட பிராந்திய செயலாளரும் வலி. கிழக்குப் பிரதேச சபையில் அங்கத்துவம் வகிக்கும் சுயேட்சைக் குழுவின் தலைவருமான தோழர் கா. செல்வம் கதிர்காமநாதன் தலைமையில் இடம்பெறவுள்ள இப் பொதுக்கூட்டத்தில், சிறப்புரைகளைக் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சி.கா.செந்திவேல், தேசிய அமைப்பாளர் தோழர் வெ. மகேந்திரன், அரசியற் குழு உறுப்பினர் தோழர் சோ. தேவராஜா, சர்வதேச அமைப்பாளர் தோழர் எஸ்.என். கிருஸ்ணப்பிரியன், வன்னி மாவட்டங்களின் செயலாளர் தோழர் நி. பிரதீபன், மலையகப் பிராந்திய செயலாளர் தோழர் டேவிட் சுரேன், பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பின் பிரதிநிதி தோழர் மோகன தர்சினி, சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப் பின் பிரதிநிதி தோழர் செப மோகன், முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதி தோழர் ச. பன்னீர்செல்வம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் யாழ். மாவட்டப் பிரதிநிதி தோழர் சபா தனுஜன், வவுனியா மாவட்டப் பிரதிநிதி தோழர் பூ. சந்திரபத்மன் வீதிப் பராமரிப்புத் தொழிலாளர் சங்கப் பிரதிநிதி தோழர் ச. மகேந்திரன் ஆகியோர் ஆற்றவுள்ளனர். தொடர்ந்து புரட்சிகரப் பாடல்களும் இடம்பெறும். நிகழ்ச்சித் தொகுப்பினைத் தோழர்கள் த. ஸ்ரீபிரகாஸ், ச. மோகன்ராஜ் ஆகியோர் மேற்கொள்வர்.
இம் மேதின கோரிக்கைகளாக, உற்பத்திப் பொருளாதாரத்தை நாசப்படுத்திய ஆட்சியினரைத் துரத்துவோம்! அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரித்து மக்களை நசுக்கிவரும் கோத்தா – மகிந்த ஆட்சியை விரட்டியடிப்போம்! உழைக்கும் மக்களுக்கான அரசியல் அமைப்பை உருவாக்க ஒன்றிணைவோம்! எட்டு மணிநேர வேலை, ஓய்வு, சுகாதாரம் உள்ளிட்ட தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடுவோம்! தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி அனைத்து உழைக்கும் மக்களையும் ஐக்கியப்படுத்தி முன்செல்வோம்! வடக்கு கிழக்கில் இடம்பெறும் தமிழ் தேசிய இனத்திற்கு எதிரான நில அபகரிப்பு உள்ளிட்ட அனைத்து பேரினவாத ஒடுக்குமுறையையும் எதிர்ப்போம்! மலையக மக்களின் தேசிய இன உரிமைகளை முன்னிறுத்தி காணி, வீட்டு உரிமைகளைப் பெறத் தொடர்ந்து போராடுவோம்! முஸ்லீம் தேசிய இனத்திற்கு எதிரான பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்ப்போம்! பெண்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளையும் கடுமையாக எதிர்க்க போராடுவோம்! பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களுக்கும் எதிராகத் தொடர்ந்து போராடுவோம்! விவசாய, மீனவர்களின் நலனைப் பேணும் அரச முறைமைக்காக போராடுவோம்! பெருந்தோட்ட தொழில்துறையை தோட்டத் தொழிலாளர்களின் பொறுப்பில் ஒப்படைக்கும் புதிய முறையை உருவாக்க போராடுவோம்! உணவுப் பாதுகாப்பிற்கும் அடிப்படைத் தேவைகளுக்கும் ஜனநாயகத்திற்கும் போராடுவோம்! தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியைக் கொள்ளையடிக்கும் ராஜபக்சாக்களை துரத்தி அடிப்போம்! அமெரிக்க, இந்திய, சீன வல்லரசுகளுக்கு வளங்களை விற்கும் தரகு – பெரு முதலாளிய அரசாங்கத்தை விரட்டுவோம்! ஆகியன முன்வைக்கப்படவுள்ளன.