
இறக்குமதிக்கான கொடுப்பனவுகளை வங்கி கட்டமைப்பில் ஊடாக செலுத்துவதை கட்டாயமாக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்படுமென மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, அவர் மேலும் உரையாற்றுகையில், வெளிநாடுகளில் கல்வி கற்கும் இலங்கையைச் சேர்ந்த மாணவர்களுக்கு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகக் கொடுப்பனவுகளுக்கும் தேவையான அத்தியாவசிய வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை வழங்குமாறு அனைத்து வங்கிகளிடமும் கோரிக்கை விடுக்கப்படும்.
அனைத்து வெளிநாட்டு நாணய பணப் பரிமாற்றங்களையும் வங்கி முறையின் ஊடாக செலுத்துவதை ஊக்குவிப்பதற்காக கட்டாய வெளிநாட்டு நாணய மாற்றத்தை இரத்து செய்வது குறித்து மத்திய வங்கி ஆராயவுள்ளது.
பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியமானது. சர்வதேச நாணய நிதியத்தின் கோரினாலும், கோராவிட்டாலும், அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட செலவினங்களை குறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தனது தலைமையிலான புதிய மத்திய வங்கி நிர்வாகம் ஒரு போதும் பின்நிற்காது என்று தெரிவித்துள்ளார்.
தற்போது இது போன்ற பல கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும், பொருளாதாரத்தை மீட்டெடுத்து இந்த நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு தானும் தமது குழுவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் தேவையற்ற செலவினங்களைக் குறைப்பதற்காக குறுகிய கால மற்றும் நீண்ட காலத்திற்கு இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய வங்கி ஆளுநர், நிதியமைச்சுக்குரிய நிறுவனங்கள் இதுவரை வர்த்தமானியில் வெளியிடப்படாவிட்டாலும், அந்தப் பகுதிகளை உள்ளடக்கும் வகையில் மத்திய வங்கியினால் தேவையான தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
உதாரணமாக எரிபொருள் மற்றும் எரிவாயு விலையை அதிகரிக்க மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதியமைச்சரின் விடயப்பரப்பு வர்த்தமானியில் வெளியிடப்பட்டாலும் இல்லாவிட்டாலும், அது மத்திய வங்கியின் செயற்பாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

