வெளிநாட்டில் இருந்து வழங்கப்படும் நன்கொடைக்கான கணக்கிற்கு 37,000 அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதி திரட்டுவதற்காக இந்த கணக்கு ஆரம்பிக்கப்பட்டது.
இந்தக் கணக்கு நன்கொடைகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கணக்கில் வரவு வைக்கப்படும் ஒவ்வொரு டொலருக்கும் இலங்கை மத்திய வங்கி பொறுப்பு என்றும், அந்தக் கணக்கின் செலவினங்களை மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
இந்த நன்கொடைகள், நன்கொடைக் கணக்கில் வரவு வைக்கப்படுவதோடு, வெளிநாடுகளிலிருந்து தமது குடும்பத்திற்கு அனுப்பப்படும் மாதாந்திர அந்நியச் செலாவணி வருமானத்தை உள்ளூர் வங்கி முறையின் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தில் உட்பாய்ச்சுவதற்கு வழிவகுக்கப்படும்.
மாதாந்தம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் இலங்கைக்கு அனுப்பப்படுவதாகவும், அந்தத் தொகையானது உள்ளூர் வங்கி முறையின் ஊடாக இலங்கைப் பொருளாதாரத்திற்கு உட்பாய்ச்சப்பட்டால் அது பொருளாதாரத்தை மீட்டெடுக்க பெரும் பலமாக அமையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.