இலங்கை ஜனாதிபதி கோட்டாபய மனித உரிமைப் பேரவை தீர்மானங்களோடு, நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல் போன்ற விடயங்களில் தான் ஒத்துழைக்க ஆயத்தம் என மனித உரிமைப் பேரவையின் ஆணையாளருக்கு தெரிவித்திருக்கிறார். ஆனாலும், ஜனாதிபதியின் இக்கூற்று நம்பத்தகாததாக இருக்கின்றது என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ஐ.நா. சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோக் சென்றதற்கு பின்னர், மனித உரிமைப் பேரவை தீர்மானங்களோடு, நல்லிணக்கம், பொறுக்கூறுதல் போன்ற விடயங்களில் தான் ஒத்துழைக்க ஆயத்தம் என மனித உரிமைப் பேரவையின் ஆணையாளருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார்.
அதைவிட, அக் கருத்துக்களில் ஜனாதிபதி பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களை நிறைவேற்றுதில் வெளியகப் பொறிமுறைகளை ஏற்றுக் கொள்ள தயாரில்லை என்றும், உள்ளகப் பொறிமுறையின் ஊடாக அதை நிறைவேற்றுவோம் என்று குறிப்பிட்டிருந்ததை மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் தனது வாய்மூல அறிக்கையின் ஆரம்பத்திலேயே அந்த விடயங்களை தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதி அப்படி கூறியிருப்பதைவிட, நடைமுறையில் அதை சாதிக்க வேண்டும். இத்தனை ஆண்டு காலத்தில், குறிப்பாக தமிழ் மக்களும், தமிழ் அரசியலில் எமது ஜனநாயக உயிரோட்டத்தில் பிறந்தவர்களின் கருத்துக்களை எடுத்துக் கொண்டால் ஜனாதிபதியின் இக்கூற்று நம்பத்தகாததாக இருக்கின்றது.
மேலும், ஜனாதிபதி கோட்டாபய ஆட்சிக்கு வந்து நாடாளுமன்றில் உரையாற்றிய போதிலும், அவர் ஒரு அரசியல் அமைப்பை உருவாக்க, ஒரு கொள்கைத் திட்டமாக பௌத்த, சிங்கள பேராண்மைத்துவ அடிப்படையில் ஒரு அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இப்போது, ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களோடு நாங்கள் ஒத்துப்போக முடியும் எனத் தீர்மானம் எடுத்திருக்கிறார். அப்படியானால், இந்த 70 ஆண்டு கால அரசியல் வரலாற்றை தமிழர்களுடைய போராட்ட வரலாற்றில், எந்தவொரு சிங்களத் தலைவர்களும், அரசுத் தலைவர்களும் இவ்வாறான வாக்குறுதிகள், ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதற்கு தவறிருக்கின்றார்கள்.
ஆகவே, ஜனாதிபதி கோட்டாபய, ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு கொடுத்த வாக்குறுதியும், நேற்று 22 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுகின்றபோது, உள்ளகப் பொறிமுறையை கையாண்டு இலங்கை அடிப்படைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தயார் என்றும் குறிப்பிட்டுள்ளது ஆச்சரியமான ஒன்று.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இருந்த இறுதிக் காலத்தில் ஐ.நா.சபையில் உரையாற்றும்போது, மனித உரிமை பேரவை தீர்மானங்களில் இருந்து விலகுவதாகவும், இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என அறிவித்ததற்குப் பின், கோட்டாபயவும் அரசாங்கமும் தாங்கள் வெளியேறுகிறோம் என்று அறிவித்து வந்திருக்கிறார்கள்.
இப்போது, ஐ.நா.சபையில் ஆற்றிய உரையில், நாட்டில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், கைதிகள் விடுதலை செய்வது, காணாமலாக்கப்பட்டவர்களுக்கு தீர்வு காண்பது, பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவது போன்ற பிரச்சினைகளைக் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஆனால், எங்களுக்கு என்னும் இதுதொடர்பில் நம்பிக்கை ஏற்படவில்லை என்றும், எத்தனை தடவைகள், எத்தனையோ ஒப்பந்தங்களில் கூட இவ் அரசாங்கம் கையெழுத்திட்டு இருக்கின்றன என அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆகையால், அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமா என்று கண்காணிக்கப்பட்டும், அவை நிறைவேற்றப்படாத இடத்து, அடுத்த ஐ.நா. மனித உரிமை பேரவை எவ்வளவு கடுமையாக இருக்கும் என்றும், அதற்கான ஆதாரங்களையும் நாங்கள் கண்காணிப்பது மட்டுமல்ல, அவற்றை சேகரிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல ஐ.நா. பேரவைக்கும் உள்ளது என தெரிவித்தார்.
மேலும், இலங்கையின் எதிர்காலத்துக்காக, சர்வதேச நாடுகளின் உதவியை கோரும் ஜனாதிபதி இந்த நாட்டின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்காமல் இந்த நாட்டில் அபிவிருத்தியையோ, முன்னேற்றத்தையோ அல்லது சுமுகமான நாடு என்ற நிலைமையையோடு ஏற்படுத்த முடியாது.
ஆகவே, சர்வதேச அரங்கின் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் நடவடிக்கைகளில் பங்குகொள்ளக் கூடிய நடைமுறைக்கு வந்தால்தான் ஜனாதிபதி மனித உரிமைப் பேரவை ஆணையாளருக்கு கொடுத்த வாக்குறுதியோ அல்லது ஐ.நா.வில் ஆற்றிய உரைக்கு அர்த்தம் இருக்கும் என்றும், சர்வதேசத்துடன் பங்களிப்போடுஇவரின் நடவடிக்கைகள் இடம்பெற்றாலே எங்களுடக்கு இதுதொடர்பில் நம்பிக்கை வரும் என்றும் தெரிவித்துள்ளார்.