பிரதமரை பதவியில் இருந்து நீக்க முடியாது! – ஜனாதிபதி அறிவிப்பு

சகலரையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தை அமைக்கத் தயார் எனவும், ஆனால் பிரதமரை பதவியில் இருந்து நீக்க முடியாது எனவும், அவ்வாறு செய்வது நாட்டை சீர்குலைத்து பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

11 சுயேச்சைக் கட்சிகளுடன் நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமரை நீக்கினால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய சர்வதேச உதவிகள் கிடைக்காமல் போகும் அபாயம் காணப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு, அது எப்படி இருக்க வேண்டும், அதன் உள்ளடக்கம் என்ன, அமைச்சர்கள் யார், போன்ற ஒட்டுமொத்த திட்டத்தையும் தன்னிடம் முன்வைக்க வேண்டும்.

எவ்வாறாயினும், பிரதமரையும் அரசாங்கத்தையும் மாற்றி சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, விமல் வீரவன்ச, விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைப்பது பிரச்சினையல்ல எனினும் பிரதமரை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் பாரிய பிரச்சினை காணப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிதி நிலைமை குறித்து விளக்கமளிக்க ஜனாதிபதி, நிதி அமைச்சர் அலி சப்ரியையும் அழைத்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான நிதி நெருக்கடி குறித்தும் நிதி அமைச்சர் அலி சப்ரி விரிவாக பேசினார். எதிர்காலத்தில் நாடு இன்னும் கடுமையான பொருளாதார விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்ற சுரேன் ராகவன் மற்றும் சாந்த பண்டார ஆகியோரின் அமைச்சுக்களையாவது நீக்குமாறு தயாசிறி ஜயசேகர ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஜனாதிபதி, அவ்வாறு செய்வது தனது நம்பகத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் சுயேச்சைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் துமிந்த திஸாநாயக்க, சந்திம வீரக்கொடி மற்றும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோர் கலந்துரையாடலை புறக்கணித்துள்ளதாக தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *