
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன.
நேற்றைய தினம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பள்ளி வாசல் ஒன்றில் குண்டுத்தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களில் 10 பேர் அளவில் பலியாகியுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
மேலும் 20 பேர் அளவில் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் கலீபா அகா குல் ஜான் பள்ளிவாசலில் நேற்றையதினம் மதியம் 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்னர் வியாழக்கிழமை ஆப்கானிஸ்தானில் இரட்டைக் குண்டுவெடிப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை இதனை மேற்கொண்டது யார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. தாக்குதலை மேற்கொண்டவர்கள் இனங்காணப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என தலிபான்களின் ஊடக தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.
மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் பெரும்பாலும் ஷியா முஸ்லிம் பிரிவினர் மீது மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

