இலங்கை வந்த தமிழக பாஜக தலைவர்

கொழும்பு, ஏப்ரல் 30: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், மே 1ல் நடக்கும் உழைப்பாளர் தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இலங்கை வந்துள்ளார்.

”பிரதமர் மோடியின் பிரதிநிதியாக செல்கிறேன்; இந்திய — இலங்கை உறவை மேம்படுத்தும் வகையில் என் பயணம் இருக்கும்,” என, அண்ணாமலை தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பின் சார்பில், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆண்டுதோறும், மே தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்தாண்டு நடக்கும் மே தின மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்தனர். அதை ஏற்று, அண்ணாமலை நேற்று இரவு இலங்கை வந்தார். இலங்கை செல்லும் முன் அவர் அளித்த பேட்டி: இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அண்டை நாடான இலங்கையோடு, இந்தியா என்றைக்குமே இணக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில், இலங்கைக்கு இந்தியா ஏகப்பட்ட உதவிகளை செய்து வருகிறது. பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில் இந்த உதவிகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, இலங்கை மக்களுக்கு தேவையான பல உதவிகளை பிரதமர் மோடி செய்துள்ளார். அங்கிருக்கும் மக்களின் மீள் வாழ்க்கைக்காக, 10 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

இதற்கு நன்றி சொல்லும் விதமாக, அங்கிருக்கும் இந்திய வம்சாவளி மக்கள், தங்களின் தொழிலாளர் காங்கிரஸ் வாயிலாக, மே 1ல் நடத்தப்படும் மே தின விழாவுக்கு வரும்படி, மோடியின் பிரதிநிதியாக என்னை அழைத்துள்ளனர். நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றவும் பணித்துள்ளனர். அதை ஏற்று, இலங்கை செல்லும் நான், பொருளாதார சிக்கலை மேம்படுத்துவதற்காக, இலங்கை அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் இந்திய அரசு தொடர்ந்து செய்ய வேண்டிய உதவிகள் குறித்து, அந்நாட்டு தலைவர்கள் எதிர்பார்ப்பை அறிந்து கொள்ள இருக்கிறேன்.

பிரதமர் மோடியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், பயனடைந்துள்ள பயனாளிகளையும் சந்திக்க இருக்கிறேன். இந்திய — இலங்கை உறவை மேம்படுத்தும் வகையில் இந்த பயணம் இருக்கும். இவ்வாறு அண்ணாமலை கூறினார். இலங்கையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அண்ணாமலை, மே 4ல் சென்னை திரும்புகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *