டெஸ்லா நிறுவனத்தின் 44 லட்சம் பங்குகளை விற்ற எலான் மஸ்க்

டெட்ராயிட், ஏப் 30

உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கி உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளார். இவற்றின் மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். டுவிட்டர் ஊடக நிறுவனத்தை வாங்கும் பேரத்தை முடிப்பதற்காகவே இவர் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் தான் இனி தனது கம்பெனியின் பங்குகளை விற்பதாக இல்லை என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தால் திசை திருப்பப்படுவார், கார் நிறுவனத்தை நடத்துவதில் போதுமான அக்கறை செலுத்த மாட்டார் என்ற சந்தேகம் டெஸ்லா முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவுகிறதாம். டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 12 சதவீதம் சரிந்த நிலையில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை அதன் பங்குகள் பெருமளவில் விற்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *