சென்னை, ஏப் 30
இலங்கை மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்ப அனுமதி கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பிவைக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதிகளை மத்திய அரசு வழங்கிட வேண்டுமென்று தமிழக சட்டமன்றப் பேரவை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும், ஸ்டாலின் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், இதற்கு முன்னரும், குறித்த விடயம் தொடர்பில், தங்களிடமும், வெளிவிவகார அமைச்சரிடமும் முன்வைத்த கோரிக்கையையும் தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இந்தக் கோரிக்கை குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசுக்குக் கிடைக்கப்பெறவில்லை என்றும் முதல்வர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.