குற்றச் செயல்கள் அதிகரிப்பு: ஈக்வடாரில் மூன்று மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு!

ஈக்வடாரில் குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் மூன்று மேற்கு மாகாணங்களில், அவசர நிலையை ஜனாதிபதி கில்லர்மோ லாஸ்ஸோ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும். அமைதி மற்றும் ஒழுங்கை அமுல்படுத்த ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குயாஸ், மனாபி மற்றும் எஸ்மரால்டாஸ் ஆகிய மாகாணங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.

4,000 பொலிஸ் அதிகாரிகளும், ஈக்வடாரின் ஆயுதப் படையைச் சேர்ந்த 5,000 துருப்புக்களும் மூன்று மாகாணங்களிலும் நிறுத்தப்படுவார்கள். குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் ஊரடங்கு சட்டம் உள்ளூர் நேரப்படி 23:00 முதல் 05:00 வரை இருக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

லாஸ்ஸோ கடந்த ஆண்டு பதவியேற்ற பிறகு வன்முறையைத் தடுக்க அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துவது இது இரண்டாவது முறையாகும்.

ஈக்வடாரில் கொலைகள் மற்றும் கும்பல் தொடர்பான குற்றங்களில் கூர்மையான அதிகரிப்பு காணப்படுகிறது. 2021இல் லத்தீன் அமெரிக்கா அல்லது கரீபியன் நாடுகளில் உள்ள வேறு எந்த நாட்டையும் விட ஈக்வடாரின் கொலை வீதம் வேகமாக அதிகரித்துள்ளதாக புலனாய்வு இதழியல் இணையதளம் தெரிவிக்கிறது.

ஈக்வடார் அதன் வரலாற்றில் மிகக் கொடிய சிறைக் கலவரங்களைக் கண்டுள்ளது. இது நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மற்றும் அதன் சிறைகளில் செயல்படும் கும்பல்களின் சக்தியை அம்பலப்படுத்தியது. செப்டம்பரில், குயாகுவில் சிறையில் சுமார் 119 கைதிகள் கொல்லப்பட்டனர். இரண்டு மாதங்களுக்குள், அதே சிறையில் புதிய சண்டையில் குறைந்தது 68 கைதிகள் இறந்தனர்.

சிறைக் கலவரத்தைத் தொடர்ந்து ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி லாஸ்ஸோ, நாடு முழுவதும் 60 நாட்களள் அவசரகால நிலையை அறிவித்தார். எவ்வாறாயினும், இது ஒடுக்குமுறை அரசியலமைப்பு நீதிமன்றத்தின் விமர்சனங்களை எதிர்கொண்டது. பின்னர் இது அவசரகால காலத்தை 30 நாட்களாக பாதியாகக் குறைத்தது மற்றும் இராணுவம் பொலிஸ் நடவடிக்கைகளுக்கு மட்டுமே ஆதரவளிக்க வேண்டும் என்று கூறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *