இலங்கையை நெருக்கடிகளிலிருந்து மீட்கும் இந்தியா!

இலங்கை அரசாங்கம், பொருளாதார நெருக்கடி அதனால் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையால் மிகமோசமான நிலைமைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது.

காலிமுகத்திடலில் சுயாதீனமாக ஒன்றிணைந்த குழுவினர் ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டு மூன்றாவது வாரத்தினை கடந்து தொடர்ச்சியான போராட்டத்தினை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தத் தொடர்போராட்டத்திற்கு ஆதரவாக நாடாளவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்விதமான போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறையில் பொதுமகன் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

அதேநேரம், அனைத்து தொழிற்சங்கங்களும் வீதிக்கு இறங்கி பாரிய போராட்டங்களையும் ஹர்த்தாலையும் முன்னெடுத்துள்ளது. எதிர்வரும் நாட்களில் இந்தப்போராட்டங்கள் இன்னமும் தீவிரமடையாலம் என்றும் அத்தொழிற்சங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இவ்விதமான நிலையில் இலங்கை அரசாங்கம் தனது முன்னைய கொள்கையை மாற்றி சர்வதேச நாணய நிதியத்திடம் அவரச மற்றும் நீண்டகால உதவியை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இதற்காக, இலங்கையிலிருந்து நிதியமைச்சர்  அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் எம் சிறிவர்தன ஆகியோர் சர்வதேச நாணயநிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா பிரதிப் பணிப்பாளர் கீதா கோபிநாத் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் துறைசார்ந்த நிபுணர்களும் கலந்து கொண்டிருந்தனர். இவர்கள் இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் நிதி உதவி வழங்குவதை உறுதி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கையானது சர்வதேச நாணய நிதியத்திடம், 4 பில்லியன் டொலர்களை கடன்களாக பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளது. எனினும், இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பு நாடாக இருப்பதால் அதற்கான கோட்டாவாக 800 மில்லியன் டொலர்கள் உள்ளன.

அதனை எப்போதும் இலங்கை கடன் உதவியாக பெற்றுக்கொள்ள முடியும்.  எனவே இலங்கை உடனடியாக கடனுதவியை சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிய நிலையில் அதற்கு சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் கோட்டாவில் அரைவாசியான 400 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதேநேரம், சர்வதேச நாணயநிதியத்தின் நிதியுதவி கிடைப்பதற்கு இலங்கை அரசாங்கம் மீளச் செலுத்தலுக்கான வரைபடமொன்றை தயாரிக்க வேண்டியுள்ளது.

தற்போதைய நிலையில் இலங்கை அரசாங்கம் கடன்களை மீளச் செலுத்துவதை நிறுத்தியுள்ள நிலையில் இந்த வரைபடம் மிகவும் முக்கியமானதாகின்றது.

அத்துடன் கடன்கள் பற்றிய ஆலோசகர், சட்ட ஆலோசகர் உள்ளிட்ட முக்கிய பதவிகளையும் நியமிக்க வேண்டிய தேவையும் இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது. அந்தப் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இவ்வாறிருக்கையில், உலக வங்கி 300 மில்லியனில் இருந்து 600 மில்லியன் வரை இலங்கைக்கு உதவி வழங்குவதாக அறிவித்து இருக்கின்றது. அதேபோன்று ஆசிய அபிவிருத்தி வங்கியும் இலங்கைக்கு உதவுவதாக அறிவித்திருக்கிறது.

சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து நிதியுதவி கிடைக்கும் வரையிலும் ஏனைய தரப்புக்கள் நிதியை வழங்கும் வரையிலும் நாட்டின் பொருளாதார நிலைமைகளை சமாளிக்க வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளது.

தற்போதைய நிலையில் அரசாங்கத்துக்கு ஏற்கனவே இணங்கியதன் பிகாரம் இந்திய அரசாங்கம் அரிசி, எரிபொருள், மருந்து வகைகளை தொடர்ச்சியாக அனுப்பி வருகின்றது.

இம்மாதத்தில் மாத்திரம் தலா 27ஆயிரம் தொன் அரசி, எரிபொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. அத்துடன் உடனடித் தேவைக்கான மருந்துகளையும் அடுத்து வரும் நாட்களில் இலங்கைக்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன.

இந்நிலையில், உள்நாட்டு நிலைமைகளைச் சமாளிப்பதற்காக இலங்கை அரசாங்கம் சீனாவிடத்தில் நிதி உதவியைக் கோரியிருந்தது. குறிப்பாக 2.5 பில்லின் டொலர்களை சீனாவிடத்தில் கோரியிருந்தது.

அத்துடன் ஏற்கனவே பெறப்பட்ட கடன்களை மீளச் செலுத்துவதற்கான கால அவகாசத்தினை நீட்டிக்குமாறும் கோரியிருந்தது.

ஆனால், சீனா, தனது முன்னைய கடன்களை மீளச் செலுத்துவதற்கான கால அவகாசத்தினை வழங்குவதற்கு தயாரில்லை. ஆனால் புதிய கடன்களை வழங்குவதற்கு தயாராக உள்ளது.

குறிப்பாக தனது முன்னைய கடன்களை புதிய கடன்களை இலங்கைக்கு வழங்கு அதன் மூலம் தீர்க்குமாறு வலியுறுத்தியுள்ளது.

இதனால், இலங்கை அரசாங்கம் சீனாவிடத்தில் நிதியுதவியை எதிர்பார்க்கும் விடயத்தில் தடுமாறிப்போயுள்ளது. அதற்கான மாற்றுவழிகளைக் கண்டறிவதற்கு ஆரம்பித்துள்ளது.

ஏற்கனவே இந்தியா பில்லியன் டெலர்கள் உதவிகளை வழங்கியுள்ளது. இந்நிலையில், தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவிகள் கிடைக்கும் வரையில் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காக நிதி அமைச்சா அலி சப்ரி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனிடத்தில் 2பில்லியன் டொலர்களை மேலதிக கடனாக கோரியுள்ளார்.

வொஷிங்கடனில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போதே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா அதனை சாதகமாக பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது.

தற்போதைய தகவல்களின் பிரகாரம் ஒரு பில்லியன் டொலர்களை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம், இலங்கைக்கு இந்தியா வழங்கும் பன்முகப்படுத்தப்பட்டதும் தாராளமானதுமான ஆதரவு தொடர்வதாக அறிவித்துள்ள புதுடில்லி இலங்கை மத்திய வங்கிக்கான 400 மில்லியன் டொலர்கள் நாணயப்பரிமாற்ற கால எல்லை இந்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியினால் தற்போதைய நாணயம்சார் ஆதரவாக அக்காலஎல்லையை நீடித்துள்ளது.

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களும், நட்சத்திர வீரர்களுமான அர்ஜுண ரணதுங்க, சனத் ஜெயசூரிய போன்றவர்கள் ‘பெரியண்ணனாக இந்தியா இலங்கைக்கு உதவுகின்றது’ என்று ‘நன்றி உணர்வுடன்’ கூறியுள்ளார்கள்.

மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கரும், இலங்கை விடயத்தில் இந்தியா கரிசனையுடன் இருக்கின்றது. பிரதமர் மோடியின் அயலுறவுக் கொள்கைக்கு அமைவாக நலத்திட்ட உதவிகள் தொடரும்’ என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை ஓரளவேனும் தீர்ப்பதில் இந்தியாவின் உதவிகளும், பங்களிப்புக்களும் அபரீதமானவை. இந்தப் புரிதல் இப்போது அனைத்து இலங்கையர்களின் மத்தியிலும் வேரூன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-யே.பெனிற்லஸ்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *