யாழ் மானிப்பாய் – காரைநகர் பிரதான வீதியின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் அங்கஜன் நடவடிக்கை!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் பிரதான வீதியின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக பணிகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

இது தொடர்பில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது முகப்புத்தகத்தில்,

யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் பிரதான வீதியின் அபிவிருத்தி பணிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த காலங்களில் நடைபெற்று வந்த நிலையில், குறித்த பகுதி மக்களினால் பல்வேறு முறைப்பாடுகள் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டன.

குறிப்பாக அப்பகுதிகளுக்குரிய மதகு மற்றும் பாலங்கள் புனரமைக்கப்படவில்லை என பல்வேறு முறைப்பாடுகள் பலதரப்பிடமிருந்து கிடைத்தவண்ணமிருந்தன. இதனால் கடந்த ஆண்டு பிற்பகுதியில் (ஐப்பசி மாதமளவில்) மழை வெள்ளம் வழிந்தோட முடியாத நிலை தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று, எனது வழிகாட்டலின் கீழ் உடனடி தீர்வாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நீர் வழிந்தோடும் வாய்க்கால்கள் புனரமைக்கப்பட்டன.

தொடர்ந்து, கிராமத்துடனான உரையாடல் மற்றும் 19.12.2021 அன்று மேற்கொண்ட களவிஜயத்தின் போது இவ்விடயங்கள் தொடர்பில் மக்கள் தமது முறைப்பாடுகளை என்னிடம் நேரில் தெரிவித்திருந்தார்கள்.

மேற்படி முறைப்பாடுகளுக்கமைவாக, 2022.02.01ம் திகதியன்று, எனது தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் பிரதான வீதியின் அபிவிருத்தி வேலைகள் நடைபெற்று முடிவடைந்த பின்னர் மதகு / பாலங்கள் வேலைகள் முழுமைப்படுத்தப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் யாழ். மாவட்ட பிரதம பொறியியலாளரால் தெரிவிக்கப்பட்டதுக்கு அமைவாக எம்மால் மதகு/பாலங்கள் அமைந்துள்ள அப்பகுதி பொதுமக்களுக்கு அவை புனரமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

தற்போது இந்த வீதியில் மதகு/பாலங்கள் வேலைகள் முழுமைப்படுத்தாமல் வேலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவ்வேலைத்தலத்தில் பயன்படுத்தப்பட்ட இயந்திர உபகரணங்கள் இடமாற்றப்பட்டதாகவும் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

நிதி அமைச்சின் 2022.04.26 ம் திகதிய சுற்றுநிருபத்திற்கு அமைய குறித்த வேலைகள் தொடர்பாக அதிகார சபையால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை அறியத்தருவதுடன், இவ்வீதியின் வேலைகள் இடைநிறுத்துவதாயின் வீதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருப்பதனை வீதி அபிவிருத்தி அதிகார சபை உறுதிப்படுத்தவேண்டியது அத்தியாவசியமாகவுள்ளது.

மேலும் ஒப்பந்தகாரருக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கு முன்னர் வீதி அபிவிருத்தி அதிகார சபை உறுதி அளித்தவகையில் பொறுப்புவாய்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையினை விரைவாக அனுப்பி வைக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் யாழ். மாவட்ட பிரதம பொறியியலாளருக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியது பொதுப்பணி சார்ந்த அனைவரினதும் தலையாய கடமையாகும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *