கஜேந்திரனின் கைதுக்கு சரவணபவன் கண்டனம்!

அகிம்சை வழியில் போராடி உயிர்நீத்தவருக்கு, அகிம்சை வழியில் அஞ்சலி செலுத்த முயன்றவர்கள் மீது பொலிஸார் அதிகார பலத்தைப் பிரயோகித்துள்ளனர். பொலிஸாரின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

நல்லூரில் தியாகி திலீபனை அஞ்சலிக்க முயன்ற நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உட்பட மூவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை தொடர்பாக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

தமிழ் மக்களுக்காக அகிம்சை வழியில் போராடி உயிர்நீத்த தியாகி திலீபனுக்கு, அமைதியான முறையில் அஞ்சலி செலுத்த முயன்ற நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உட்பட மூவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையைக் கேள்விக்குறியாக்கும் வகையில், அதிகார பலத்தைப் பிரயோகித்து, அவரைக் குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். அஞ்சலிப்பதற்காக ஏற்றப்பட்ட சுடரை காலால் நசுக்கி அணைத்துள்ளனர். இவை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவையாகும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ் மக்களுக்கு நேசக் கரம் நீட்டுகிறார். ஆனால் நாட்டில் அரசும், அதன் ஏவலாளர்களும் தமிழ் மக்களை நசுக்கும் செயலிலேயே ஈடுபடுகின்றனர். தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் கூட நாட்டில் மறுக்கப்படுகின்றது. அதன் ஒரு அங்கமே நாடாளுமன்ற உறுப்பினரின் கைது நடவடிக்கை.

குடாநாட்டில் வன்முறைகள், போதைப்பொருள் பாவனை தலைவிரித்தாடும் நிலையில், அவற்றையெல்லாம் கண்டும் காணாது இருக்கும் பொலிஸார், தமிழ் மக்கள் நினைவேந்தல்களை மேற்கொள்ளும்போது பாய்ந்து விழுந்து அவற்றைத் தடுப்பதற்கு என்ன என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்வது வழமையாகிவிட்டது. தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை தடுப்பதற்கு கொரோனா நிலைமையைக் கையில் எடுக்கும் பொலிஸார், மதுக்கடைகளில் கூட்டம் திரளும்போது பாதுகாப்புக்கு நிற்கின்றனர். தமிழ் மக்களின் உரிமைகளைத் தடுப்பதில் காட்டும் அக்கறையைப் பொலிஸார், வன்முறைகளைத் தடுப்பதிலும், சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்துவதில் காட்ட வேண்டும்.- தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *