நாட்டுக்காக உயிர்நீத்தவர்களை நினைவு கூர முடியாமல் தடுப்பவர்களால் எப்படி உள்நாட்டு பொறிமுறை மூலம் தீர்வு வழங்க முடியும்? நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை கைது செய்த விதமே ஜனாதிபதி கூறும் உள்நாட்டு பொறிமுறை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
உண்ணாவிரதம் இருந்து அகிம்சை போராட்டத்தில் தனது உயிரை ஆகுதியாக்கிய தியாகி திலீபனை நினைவு கூர தடைகளை வடக்கு கிழக்கில் உள்ள பொலிசார் நீதிமன்றத்தின் ஊடாக ஏற்படுத்தியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அஞ்சலி வணக்கம் செலுத்தும்போது எந்தவிதத் தடை உத்தரவும் இன்றி ஒரு நாயை பிடித்து இழுத்துச்செல்வதை போன்று இழுத்துச் சென்ற விதம் தமிழ் மக்களின் மனதை புண்படுத்துன் செயலாகும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது, அவரது சிறப்புரிமைகளை மீறும் வகையில், இந்த ஜனநாயக நாட்டில் இத்தனை மோசமான அரச வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளமையானது, இங்குள்ள சாதாரண தமிழர்களின் இயல்புவாழ்வுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை தெட்டத்தெளிவாக எண்பித்துள்ளது எனவும் அவர் கூறினார்.
மேலும், கொவிட் நிலைமைகளால் மக்கள் ஒன்று கூடி இவ்வாறான அஞ்சலி நிகழ்வுகளை நடத்துவதால் நோய் பரவும் ஆபத்து உண்டு என கூறப்படுகிறது.
ஆனால், கடந்த 23 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஷபக்ச கலந்து கொண்ட நிகழ்வுகளில் எல்லாம் மக்கள் கூட்டமாக நெருங்கி நின்றனர். அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் எந்த வித சமூக இடைவெளிகளும் இன்றி குழுமி நின்றதை அவதானிக்க முடுந்தது.
ஆளும் கட்சி அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு கொரோனா தாக்கம் ஏற்படாதா? தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில்தான் கொரோனா பரவுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைதியான முறையில் அஞ்சலி செய்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை ஒரு குற்றவாளியைப்போல் வலுக்கட்டாயமாக பொலிசார் கைது செய்தமை கண்டனத்திற்கு உரிய விடயமாகும்.
ஜனாதிபதி அமெரிக்கா சென்று வடகிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாக பேசுகிறார். உள்நாட்டு பொறிமுறை மூலம் தீர்வு வழங்குவது சம்மந்தமான கருத்தை தெரிவிக்கின்றார். அவர் வெளிநாட்டில் அந்த கருத்தை தெரிவித்து 48, மணித்தியாலங்கள் முடிவுறாத நிலையில் உள்நாட்டில் உயிர்நீத்தவரை நினைவு கூரமுடியாமல் அடக்கு முறையை பொலிஸார் ஏவுகின்றனர். இதுதானா உள்நாட்டு பொறிமுறை? எனவும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.